×

ஒரே நிலத்திற்கு இருவருக்கு சான்று - விஏஓ மீது நடவடிக்கை கோரி மனு

விருதுநகர், ஜன. 22: ஒரே நிலத்தை இருவருக்கு சொந்தம் என சான்று வழங்கிய விருதுநகர் விஏஓ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் விருதுநகர் காந்தபுரம் தெருவைச் சேர்ந்த பாண்டியம்மாள் நேற்று மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
விருதுநகரில் உள்ள சிவகாசி ரோட்டில் கடந்த 2011ல் 2 சென்ட் நிலத்தை ரோட்டடியாக வாங்கினேன். 2016ல் எனது நிலத்திற்கு பின்னால் இருக்கும் நிலத்திற்கு சொந்தக்காரர் சேசுரத்தினம் என்பவர், 20 அடி பாதை கேட்டதால், அந்த அளவிற்கு நிலத்தை, அவருக்கு கிரையம் செய்து கொடுத்தேன். பாக்கியுள்ள இடத்தில் ஒரு செட் அமைத்து, எனது அனுபவ பாத்தியத்தில் இருந்து வந்தது. இந்நிலையில், எனக்கு பின்னால் உள்ள இடத்தை 4 மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்ற சூலக்கரை இன்ஸ்பெக்டர் ராமராஜ் வாங்கினார். அந்த இடத்தில் திருமண மண்டபம் கட்ட இருப்பதாகவும், எனது நிலத்தையும் விலைக்கு தரும்படி மிரட்டினார். நான் கொடுக்கவில்லை. இதனையடுத்து, எனது நிலத்தை புறம்போக்கு நிலம், கடைக்கு மின் இணைப்பு கொடுக்கக் கூடாது என மின்வாரியத்திற்கு புகார் அனுப்பினார். இதை தொடர்ந்து விருதுநகர் விஏஓ விஜயகுமாரிடம் எனது இடத்திற்கு அனுபவச் சான்று மற்றும் மின்வாரியத்திற்கு பரிந்துரை சான்று பெற்றேன். இந்நிலையில், அதே இடத்தை ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ராமராஜூக்கு சொந்தம் என விஏஓ சான்று வழங்கி உள்ளார். நீதிமன்ற தடை உத்தரவை மீறி விஏஓ, சர்வேயர் உதவியுடன் எனது நிலத்தை அபகரித்துவிட்டனர். ராமராஜூக்கு சாதகமாக சான்று வழங்கி நிலத்தை அபகரிக்க உதவியாக இருந்த விஏஓ மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.



Tags :
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...