×

ஆட்களை ஏற்றும் சரக்கு வாகனங்கள் போலீசார் கவனிப்பார்களா?

சிவகாசி, ஜன. 22: சிவகாசி பகுதியில் ஆட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேன்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகளை சோதனை செய்து அபராதம் விதிக்கும் போலீசார், விதிமீறும் சரக்கு வாகனங்களை கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சிவகாசி மணிநகர்-விஸ்வநத்தம் சாலை விலக்கில் நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இப்பகுதியில் அரசு பள்ளி செயல்படுகிறது. விபத்து அபாயம் உள்ள இப்பகுதியில், போலீசார் வாகன கண்காணிப்பில் ஈடுபடுவதில்லை என்கின்றனர். இப்பகுதியில் போக்குவரத்து தடுப்புகளும் இல்லை. வாகன சோதனையில் ஈடுபடும் சிறப்பு எஸ்ஐக்கள், ஏட்டுக்கள், ரோந்து போலீசார் என அனைவரும் சரக்கு வாகனங்களில் ஆட்கள் ஏற்றிச் செல்வதை கண்டுகொள்வதில்லை. வட்டார போக்குவரத்து அலுவலரும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லும்போது விபத்து ஏற்பட்டால், அதிக உயிரிழப்பு ஏற்படுவதால், இத்தகைய வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்ல நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. மேலும், ஆட்களை ஏற்றி சென்றால், வாகன உரிமத்தை ரத்து செய்வதோடு, ஓட்டுனரின் உரிமத்தையும் பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால், சிவகாசி பகுதியில் வேலைக்கு செல்வோர், அரசு பஸ் வசதி இல்லாத கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களும் சரக்கு ஆட்டோவில் செல்கின்றனர். இதனால், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் மீது போலீசார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...