×

தென்னைக்கு அடுத்ததாக அழிந்துபோன கயிறு தொழிற்சாலை சேதுபாவாசத்திரம் பகுதி தொழிலாளர்கள் கவலை

சேதுபாவாசத்திரம், ஜன. 22:  கஜா புயலின் கோரதாண்டவத்தால் சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதியில் தென்னைக்கு அடுத்ததாக கயிறு தொழிற்சாலைகள் முற்றிலும் அழிந்துபோனது. இதனால் வேலையின்றி தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர்.தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதிகளில் அதிகளவில் தென்னை மரங்கள் இருந்தது. இதனால் தென்னை சார்ந்த கொப்பரை மற்றும் கயிறு தொழிற்சாலை போன்ற தொழில்கள் அதிகமாக உள்ளது. தேங்காய் மட்டைகள் அதிகம் கிடைத்ததால் இந்த பகுதியில் மட்டும் 100க்கும் மேற்பட்ட கயிறு தொழிற்சாலைகள் இருந்தன.
இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி அதிகாலை கஜா புயல் கரையை கடந்தது. அப்போது புயலின் கோரதாண்டவத்தால் சேதுபாவாசத்திரம்,பேராவூரணி பகுதியில் உள்ள அனைத்து கயிறு தொழிற்சாலைகளும் முழுவதுமாக சேதமடைந்தது.
அனைத்து ெதாழிற்சாலைகளின் மேற்கூரைகளும் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் தொழிற்சாலைகளின் மேற்கூரைகள் சூறைக்காற்றில் பறந்து சென்றது. மேலும் தொழிற்சாலைகளில் இருந்த மோட்டார்கள் பழுதானது.தற்போது தொழிற்சாலைகளை மீண்டும் மராமத்து செய்தாலும் தொழிற்சாலை இயங்குவதற்கான வழியில்லை. கஜா புயலால் தென்னைகள் முற்றிலும் சாய்ந்துவிழுந்துதால் தேங்காய் வருவாய் இன்றி தேங்காய் மட்டை கிடைப்பது அரிதாகியுள்ளது. தப்பி பிழைத்து நிற்கும் தென்னை மரங்களிலும் தேங்காய் காய்ப்பதற்கு 2 ஆண்டுகளாகும். கஜா புயல் தாக்கி 70 நாட்களை நெருங்கும் நிலையிலும் இதுவரை எந்த ஒரு தொழிற்சாலையிலும் மராமத்து பணிகள் செய்யவில்லை. இதற்கான காரணமாக ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் கயிறு தொழிற்சாலைகளுக்கு பல்வேறு இடங்களில் மின் இணைப்பு கிடைக்கவில்லை. பொதுவாக தேங்காய் மட்டையை நம்பி இருந்த கயிறு தொழிற்சாலைகள் முற்றிலும் அழிந்துவிட்டது. இதனால் தொழிற்சாலை உரிமையாளர்கள் தொழிலின்றி அவதிப்படுகின்றனர். மேலும் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி வீட்டில் முடங்கி உட்கார்ந்துள்ளனர். எனவே தொழிற்சாலை உரிமையாளர், தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : area ,Sethupawatri ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...