×

குடந்தை பொற்றாமரை குளத்தில் குப்பை காய்கறிகள் கொட்டுவதால் துர்நாற்றம் - தண்ணீர் இருந்தும் நீராட முடியாமல் பக்தர்கள் அவதி

கும்பகோணம், ஜன. 22:  கும்பகோணம் பொற்றாமரை குளத்தில் உள்ள தண்ணீரில் குப்பைகள், அழுகிய காய்கறிகள் கொட்டுவதால் ஏற்படும் துர்நாற்றத்தால் புனித நீராட முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயிலுக்கு சொந்தமான பொற்றாமரை குளம் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற மகாமக பெருவிழாவின்போது மகாமக குளத்துக்கு அடுத்தபடியாக பொற்றாமரை குளத்தில் பக்தர்கள் நீராடுவது வழக்கம். இத்தகைய சிறப்பு பெற்ற பொற்றாமரை குளம், கடந்த சில மாதங்களாக தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனால் உள்ளூர் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் கும்பகோணத்திற்கு வரும் பக்தர்கள் நீராட முடியாமல் சிரமப்பட்டனர்.பின்னர் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் குளத்தில் 2 அடி அளவில் தேங்கி நிற்கும் தண்ணீரில் பாசிகள் படர்ந்தும், குப்பைகள், அழுகிய காய்கறிகள், மீதமான பூக்கள் உள்ளிட்டவை கொட்டப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தண்ணீர் இருந்தும் பக்தர்களாக புனித நீராட முடியவில்லை. மேலும் குளத்தின் அருகில் உள்ள சுகாதரா வளாகத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் ேகாயிலுக்கு வருவதற்கே பக்தர்கள் யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புனித குளத்துக்கும், கோயிலுக்கும் இடையே உள்ள சுகாதார வளாகத்தை அகற்ற வேண்டுமென பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. எனவே கும்பகோணம் பொற்றாமரை குளத்தில் கழிவுகளை விரைந்து அகற்ற வேண்டும். மேலும் அருகில் உள்ள சுகாதார வளாகத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்