×

ஆட்கள் பற்றாக்குறையால் 2000 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் சாய்ந்து வீணாகும் அவலம்

கோபி, ஜன.22: கோபி மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும்  கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல்  பயிரிடப்படுகிறது. இதில், தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனத்தில்  ஆண்டிற்கு இரண்டு போக சாகுபடி நடப்பது வழக்கம். இங்கு விளைவிக்கப்படும்  நெல் வகைகள் தரம் மற்றும் வீரியம் மிகுந்தவையாக இருப்பதால் பெரும்பாலும்  விதை நெல்லிற்காக உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். கடந்த சில  ஆண்டுகளாக போதிய அளவு மழை இல்லாததால் ஒரு போக சாகுபடி கூட செய்ய முடியாத  நிலை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு தொடர் மழை காரணமாக  பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்ததை தொடர்ந்து சாகுபடி பணிகள்  தொடங்கப்பட்டது.

நெல் நடவு பணிகள் முடிவுற்ற 120வது நாள் முதல்  அறுவடை பணிகள் தொடங்க வேண்டும் என்ற நிலையில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக  அறுவடை பணிகள் பாதியளவு கூட நடைபெறவில்லை. இதனால் நாமக்கல் உள்ளிட்ட  பல்வேறு மாவட்டங்களில் இருந்து நெல் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு  அறுவடை பணிகள் நடந்து வருகிறது. அதே நேரத்தில் இயந்திரங்களின்  பற்றாக்குறை காரணமாக பல இடங்களில் குறிப்பாக அத்தாணி சாலை,  நாகதேவம்பாளையம், சுண்டப்பாளையம், காவேரி பாளையம் உள்ளிட்ட பகுதியில்  சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள்  உரிய காலத்தில் அறுவடை செய்யாததால், நெல் பயிர்கள் கீழே சாய்ந்து விழுந்து  பயிர்கள் வீணாகி வருகிறது.

விவசாயிகள் கூறுகையில்,`கடந்த  சில ஆண்டுகளாக கோபி மற்றும் சுற்றுப்புற பகுதியில் நெல் உற்பத்தி நடைபெறாத  நிலையில் விவசாய கூலி தொழிலாளர்கள் தற்போது வேறு வேலைக்கு சென்று  விட்டனர். அதனால், இந்த ஆண்டு கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாகவே  அறுவடை பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில்,  வேளாண்மை பொறியியல் துறை சார்பில் கோபி பகுதிக்கு என நெல் அறுவடை  இயந்திரங்கள் வாங்கப்பட்டிருந்தால் உரிய காலத்தில் நெல் அறுவடை பணிகள்  நடந்திருக்கும். மற்ற மாவட்டங்களில் இருந்தே நெல் அறுவடை இயந்திரங்கள்  வரவழைக்கப்பட்டு அறுவடை பணிகள் நடந்து வருகிறது.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை