×

25ம் தேதி மாவட்ட அளவில் சாலை மறியல் போராட்டம் - ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் முடிவு

தஞ்சை, ஜன. 22:  9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பில் இன்று(22ம் தேதி) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தஞ்சையில் ஜாக்டோ ஜியோ மாவட்ட உயர்மட்டக்குழு கூட்டம் நடந்தது. கூட்டமைப்பு தலைவர்கள் இளையராஜா, ரங்கசாமி தலைமை வகித்தனர். கூட்டத்தில் 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கும் தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்ைப பறிக்கும் அரசாணை எண்56 ரத்து செய்ய வேண்டும். 3,500 தொடக்கப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும். 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவை கைவிட வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை நியமனம் செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (22ம் தேதி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கி வட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. நாளை (23ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (24ம் தேதி) ஆகிய இரண்டு நாட்கள் வட்ட அளவில் மறியல் போராட்டம் நடத்துவது. வரும் 25ம் தேதி மாவட்ட அளவில் மறியல் போராட்டம் நடத்துவது. 26ம் தேதி மாநில அளவிலான ஜக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டத்தை நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...