×

ரூ.35.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் குடியிருப்பு

ஈரோடு, ஜன. 22: ஈரோடு பெரியஅக்ரஹாரம் அன்னை சத்யாநகரில் ரூ.35.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி முடிவடைந்த நிலையில் திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இதனை திறப்பு விழா செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். ஈரோடு பெரியஅக்ரஹாரம் பிச்சைக்காரன்பள்ளம் ஓடையை ஒட்டியுள்ள அன்னை சத்யாநகரில் 1987ம்ஆண்டு குடிசைமாற்று வாரியத்தின் மூலமாக 648 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த வீடுகள் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனநிலையில் வீடுகள் அனைத்தும் மோசமான நிலையில் இருந்து வந்தது.

மேலும் கடந்த சில ஆண்டுக்கு முன் சிலாப் இடிந்து விழுந்து இளம்பெண் ஒருவர் இறந்தார். இதனால், இந்த குடியிருப்பை இடித்து விட்டு புதிதாக குடியிருப்பு கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக குடிசை மாற்றுவாரியத்தின் மூலமாக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 448 வீடுகள் கொண்ட 4 அடுக்குமாடி குடியிருப்பு கட்ட 35 கோடியே 46 லட்சத்து 77  ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் பழைய வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு 8 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு அவர்களை வெளியேற்றினார்கள். மோசமான நிலையில் இருந்த வீடுகள் அனைத்தும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு கடந்த 2017ம்ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது கட்டுமான பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் தரைதளத்துடன் 4 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்திற்கு சுண்ணாம்பு அடித்தல், மின் இணைப்புகளுக்காக ஒயரிங் செய்யும் பணிகள் போன்ற பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

ஒவ்வொரு வீடடிற்கும் தேர்வு செய்யப்படும் பயனாளிகள் 79  ஆயிரத்து 200 ரூபாய் செலுத்த வேண்டும் என்று குடிசைமாற்று வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் பலர் பணம் செலுத்தாமல் உள்ளனர். இதனால், பயனாளிகளை தேர்வு செய்வதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆளும்கட்சியை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. தற்போது பணிகள் நிறைவடையும் நிலையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பை திறப்பு விழா செய்து பயனாளிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

பொதுமக்கள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியை தொடங்கினார்கள். எங்களுக்கு இடைக்கால நிவாரணமாக 8 ஆயிரம் ரூபாயை கொடுத்து வெளியேற்றினார்கள். நாங்கள் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறோம். தற்போது கட்டப்பட்டுள்ள வீட்டை குலுக்கல் முறையில் வழங்குவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில் எப்போது திறப்பு விழா செய்வார்கள் எனத் தெரியவில்லை. நாங்கள் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறோம். வாடகையும் கொடுக்க முடியாத நிலையில் இருந்து வருகிறோம். இந்த அடுக்குமாடி குடியிருப்பை திறந்து ஏற்கனவே எந்தெந்த வீட்டில் குடியிருந்தோமோ அதே வீட்டை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்றனர்.

Tags : apartment ,opening ceremony ,
× RELATED திருவிக நகர் தொகுதியில் மக்கள்...