×

பட்டுக்கோட்டையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் அதிகாரிகளிடம் வாக்குவாதம்

பட்டுக்கோட்டை, ஜன. 22:  கஜா புயல் கடந்தாண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி அதிகாலை கரையை கடந்தது. கஜா புயலின் கோரதாண்டவத்தால் ஒட்டுமொத்த டெல்டா மாவட்டமும் பாதிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஊர்களில் வாழும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தஞ்சை மாவட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான தென்னை மரங்கள் அடியோடு அழிந்தது. இதுதவிர நெற்பயிர்கள், வாழை, செம்மரம், தேக்குமரங்கள் என அனைத்துமே முற்றிலும் அடியோடு அழிந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்டுக்கோட்டை பெரியகடைத்தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் நேற்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் நிவாரணப் பொருட்களை வழங்கினர். அப்போது அங்கு நிவாரண பொருட்கள் வாங்க வந்திருந்த நகராட்சி 10வது வார்டு மன்னைநகர், எஸ்.பி.எஸ்.நகர், கைலாசநாதபுரம்,தர்மலிங்கம்நகர், அய்யர்தோப்பு, மாட்டுச்சந்தை ரோடு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலருக்கு நிவாரண பொருட்கள் வழங்கவில்லை. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேட்டதற்கு உங்களுடைய பெயர்கள் இல்லையென கூறினர். அதற்கு நிவாரண பொருட்கள் கொடுத்தால் அனைவருக்கும் கொடுங்கள். இல்லையேல் யாருக்கும் நிவாரண பொருட்கள் கொடுக்கக்கூடாது என்று கூறி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து நிவாரண பொருட்கள் வழங்காததை கண்டித்து  தொடக்கப்பள்ளி வளாகத்திலேயே மன்னைநகர், எஸ்.பி.எஸ்.நகர், கைலாசநாதபுரம், தர்மலிங்கம்நகர், அய்யர்தோப்பு, மாட்டுச்சந்தை ரோடு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து இன்னும் யாருக்கு நிவாரண பொருட்கள் வழங்கவில்லை என்பதை எழுதி கொடுங்கள். தாசில்தாரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.



Tags : protesters ,
× RELATED இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த நடவடிக்கை...