×

சரஸ்வதி மகால் நூலகத்தில் நூற்றாண்டு விழா நடத்த கோரிக்கை

தஞ்சை, ஜன. 22:  உலக புகழ்பெற்ற தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம், பொது நூலகமாக மாறி நூற்றாண்டை எட்டியதால் நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும். மேலும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக புகழ்பெற்ற தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் கிபி 1535- 1675ம் ஆண்டுகளில் தஞ்சையை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களால் உருவாக்கப்பட்டது. இதன்பின்னர் தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் இந்த நூலகத்தை மேம்படுத்தினர். இருப்பினும் இந்த நூலகம் தஞ்சையை ஆட்சி செய்த மன்னர் இரண்டாம் சரபோஜியின் ஆட்சிகாலத்தில் உச்சநிலையில் இருந்தது. இந்த நூலகத்தில் சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆகிய மன்னர்கள் ஆட்சி காலத்தின் வரலாற்று சான்றுகள், அரியவகை நூல்கள், ஓலைச்சுவடிகள், அரியவகை பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மன்னர் சரபோஜி தன்வந்தரி மருத்துவமனை துவங்கி மக்களுக்கு அளித்த சிகிச்சைகள் தொடர்புடைய பதிவுகள் செய்யப்பட்ட ஓலைச்சுவடிகள் மற்றும் பல்வேறு வகையான சிகிச்சை தொடர்பான ஓலைச்சுவடிகள் அதிகளவில் இடம் பெற்றுள்ளது. மன்னர் சரபோஜி, காசிக்கு யாத்திரை சென்றபோது வழியில் விலைக்கு வாங்கிய நூல்கள், இந்திய நாட்டின் வரைபடங்கள், அரசர்கள் பயன்படுத்திய கலைப்பொருட்கள், திப்பு சுல்தான் காலத்தில் சூறையாடப்பட்ட நூல்களின் பட்டியல்கள் உள்ளிட்ட அரிய பொக்கிஷங்கள் இந்த நூலகத்தில் பாதுகாப்பாக உள்ளது. தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காகித சுவடிகளும், 1,500க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 3 லட்சம் மோடி ஆவணங்கள் உள்ளது. இதுதவிர பண்டைய காலத்தில் பயன்படுத்திய அரியவகை மூலிகைகள், ஜோதிடம், ஆன்மிகம், மருத்துவம் தொடர்பான ஏராளமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளது.
தஞ்சையை ஆட்சி செய்த மன்னர்கள் காலத்தில் மன்னர்களும், மன்னர்கள் குடும்பத்தினர் மட்டும் பயன்படுத்தி வந்த இந்த நூலகம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1918ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி பொது நூலகமாக மாற்றப்பட்டது. இவ்வாறு பொது நூலகமாக மாற்றப்பட்டதால் வரலாற்று ஆய்வாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பயனடைந்தனர். இதைதொடர்ந்து இந்த நூலகம், கலெக்டர் தலைமையில் கொண்ட நூலக குழுவினர் பராமரித்து வருகின்றனர்.
இந்த நூலகத்தில் உள்ள அரியவகை நூல்களில் இருந்து குறிப்புகள் எடுத்து செல்ல தினம்தோறும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு உலக புகழ்பெற்ற தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் பொதுநூலகமாக மாற்றப்பட்டு நூற்றாண்டை கண்டுள்ளது. எனவே இந்த நூலகத்துக்கு நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் நடத்த வேண்டுமென அனைத்து தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்துக்கு 25 ஆண்டுகளாகியும் இதுவரை முழுநேர இயக்குனர் நியமனம் செய்யாமல் காலியாகவே உள்ளது. மாவட்ட ஆட்சியர் தான் இயக்குனர் பணியிடத்தை கூடுதலாக கவனித்து வருகிறார். அதேபோல் நிர்வாக அலுவலர் பணியிடம் பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளது.
இதற்கு காரணம் வருவாய்த்துறை வசம் இருந்த நிர்வாக அலுவலர் பணியிடம் கடந்த ஓராண்டுக்கு முன் பள்ளி கல்வித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு ஒப்படைத்த நாள் முதல் திருச்சி முதன்மை கல்வி அலுவலர் கூடுதல் பொறுப்பாக சரஸ்வதி மகால் நூலக நிர்வாக அலுவலர் பணியிடத்தை பார்த்து வருகிறார். உலக புகழ்பெற்ற சரஸ்வதி மகால் நூலகம் நூற்றாண்டை எட்டினாலும் முழுநேர இயக்குனர் மற்றும் நிர்வாக அலுவலர் இல்லாத காரணத்தால் பின்தங்கியே இருப்பதாக தெரிவிக்கின்றனர். தமிழ், சமஸ்கிருத பண்டிதர்கள் பணியிடத்தில் தலா 1 பண்டிதர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். 3 நூலகர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 1 நூலகர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். எனவே தமிழக அரசு முன்வந்து இந்த நூலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Saraswathi Mahal ,
× RELATED தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில்...