×

மாவட்டத்தில் 89 மையங்களில் எல்கேஜி வகுப்பு துவக்கம்

ஈரோடு, ஜன.22: ஈரோடு மாவட்டத்தில் 89 மையங்களில் எல்கேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. ஆனால், இடைநிலை ஆசிரியர்கள் பணியை புறக்கணித்ததால் மாணவர் சேர்க்கை மந்தமாக இருந்தது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு மாவட்டத்திற்கு ஒரு பள்ளி தேர்வு செய்யப்பட்டு எல்கேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் எல்கேஜி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 89 மையங்களில் எல்கேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. ஈரோடு எஸ்.கே.சி.ரோடு பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் பாலமுரளி தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகளில் உள்ள அங்கன்வாடிa மையங்களிலும் இந்த வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமித்துள்ளதால் ஆசிரியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  மாண்டிச்சோரி பயிற்சி முடித்தவர்கள் லட்சக்கணக்கில் வேலையின்றி உள்ள நிலையில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

எல்கேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல பள்ளிகளில் இதற்கான உத்தரவுகளை இடைநிலை ஆசிரியர்கள் பெறவில்லை. இதனால் நேற்று நடந்த மாணவர் சேர்க்கையை அந்தந்த பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்களை கொண்டு நடத்தினர். மாவட்டம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் இந்த மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளாததால் மாணவர் சேர்க்கை மந்தமாகவே இருந்தது. அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளையே எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர்களாக சேர்த்தனர்.  இன்று முதல் ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளதால் மாணவர் சேர்க்கையும் தடைபடும் நிலை உள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில்,`தமிழக அரசு சார்பில் எல்கேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. இதில் கல்வி மாவட்டத்தில் ஈரோட்டில் 23 மையங்களிலும், கோபியில் 23 மையங்களிலும், சத்தியில் 18 மையங்களிலும், பவானியில் 16 மையங்களிலும், பெருந்துறையில் 9 மையங்களிலும் என 89 மையங்களில் எல்கேஜி வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இந்த மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் யாரும் வராததால் தலைமை ஆசிரியர்களை கொண்டு மாணவர் சேர்க்கையை தொடங்கி உள்ளோம். இதில், எல்கேஜி.,யில் 124 மாணவர்களும், யுகேஜி.,யில் 135 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். எல்கேஜி வகுப்புகளுக்கு நடுநிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள். இது கூடுதல் பணியாக ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதில்லை. பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களைதான் இந்த வகுப்புகளுக்கு நியமித்துள்ளோம்’ என்றார்.

Tags : stadium ,centers ,district ,
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி...