×

ஜல்லிக்கட்டு நடத்த தடை கண்டித்து கருப்புகொடியேற்றி மக்கள் போராட்டம்

அரியலூர்,ஜன.22: அரியலூர் மாவட்டம் கீழக்குளத்தூர் கிராமத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கு போலீசார் தடைவிதித்ததையடுத்து பொதுமக்கள் தங்களது கிராமத்தில் கருப்புகொடியேற்றி எதிர்ப்பை தெரிவித்தனர். அரியலூர் மாவட்டம் கீழக்குளத்தூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத்தினத்தன்று ஜல்லிக்கட்டு மற்றும் கயிற்றுப்பாய்ச்சல் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராமமக்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வாடிவாசல் அமைக்கும்பணி தொடங்கியது.இந்நிலையில் வழக்கம்போல் ஜல்லிக்கட்டு நடைபெறும் தெருவில் நடத்தாமல், ஊருக்கு ஒதுக்குபுறமான திறந்தவெளியில் ஜல்லிக்கட்டை நடத்தினால் அனுமதி வழங்கப்படும் என்று போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும் வழக்கமான வீதியில் மட்டுமே நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறியதால், ஜல்லிக்கட்டு நடத்த போலீசார் தடைவிதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கீழக்குளத்தூர் கிராமக்கள் வாடிவாசல் மற்றும் அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும் கீழ குளத்தூர் கிராம மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்து ஆண்டுதோறும் நடைபெறும் இடத்திலேயே ஜல்லிக்கட்டை நடத்தப்போவதாக  தெரிவித்துள்ளனர்.




Tags :
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...