×

பெரம்பலூரில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை திட்டம் துவக்கம்

பெரம்பலூர், ஜன. 22: ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் நடைமுறையை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்தார்.ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் நடைமுறையை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா நேற்று மாவட்டக் கருவூல அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் தமிழக அரசால் கடந்த 10ம் தேதி தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இதனையடுத்து பெரம்பலூர் மாவட்ட கருவூலத்துறை அலுவலகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பெரம்பலூர் மாவட்டக் கருவூலத்துறை அலுவலகத்தில் சுமார் 8,336 அரசுப்பணியாளர்கள் மற்றும் 3,822 ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.இத்திட்டத்தில் மின்னணு பணிப்பதிவேடு மற்றும் ஊதிய மென்பொருள் பதிவுகள் ஒருங்கிணைக்கப்படுவதால் மின்னணு பணிப்பதிவேட்டில் செய்யப்படும் அனைத்து பதிவுகளும் உடனுக்குடன் ஊதிய மென்பொருளில் தானாகவே மேம்படுத்தப்படுவதால் அரசுப்பணியாளர்கள் தங்களது ஊதிய விவரத்தினை உடனுக்குடன் சரிபார்க்க முடியும். நினைவூட்டுத் தகவல்களின் வாயிலாக ஆண்டு ஊதிய உயர்வு, விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றிற்கான பணப்பலன்களை பணியாளர்கள் உரியநேரத்தில் பெறஇயலும்.
பதவி உயர்வு கருத்துருக்கள் தயாரித்தல், வருடாந்திர ஊதிய உயர்வு அங்கீகரித்தல், ஊதிய நிர்ணயம், விடுப்பு அங்கீகரிப்பு மற்றும் ஓய்வூதிய கருத்துருக்கள் அனுப்புதல் போன்ற பணிகளை சரியான காலத்தில் மேற்கொண்டு அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் உரிய காலத்தில் பெற வழிவகுக்கிறது. அனைத்து பணியாளர்களும் அவரவர் பணிப்பதிவேட்டினை கணினி மற்றும் கைப்பேசி செயலியிலும் தங்களது கடவு சொற்களை பயன்படுத்தி அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது எனதெரிவித்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், கருவூல அலுவலர்(கூடுதல் பொறுப்பு) எழில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(கணக்கு) சித்ரகலா, சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் மற்றும் கருவூலத் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...