×

பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி, ஜன. 22:பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் ரேஷன் கடை இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் கிராம சேவை மைய கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில், பெருமாட்டுநல்லூர், கன்னிவாக்கம், பாண்டூர், அண்ணாநகர், தர்காஸ், தங்கப்பாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் ஊராட்சிக்கு உட்பட்ட கன்னிவாக்கம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை இடிந்து விழும் அபாயம் நிலையில் உள்ளது. இதனால் கிராம சேவை மைய கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘’கன்னிவாக்கம் கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடை கட்டப்பட்டது.  மழைக்காலங்களில் மேற்படி ரேஷன் கடையில் ஆங்காங்கே வெடிப்புகள் விட்டு காணப்படுவதால் அதன் வழியாக மழைநீர் கொட்டுகிறது. மேலும் கடந்த 2015, 2016ம் ஆண்டுகளில் பெய்த கன மழையின்போது மழைநீர் உள்ளே புகுந்ததால் அனைத்து பொருட்களும் மழைநீரில் நனைந்து வீணாகியது.

இதனையடுத்து ரேஷன் கடை அருகில் புதிதாக கட்டப்பட்ட கிராம சேவை கட்டிடத்தில் கடந்த ஒரு ஆண்டாக ரேஷன் கடை இயங்கி வருகிறது. மேலும் மேற்படி ரேஷன் கடை இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள ரேஷன் கடையை உடனடியாக அகற்றிவிட்டு புதிய ரேஷன் கடையை கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : ration shop ,Perumattu Nallur ,
× RELATED குத்துக்கல்வலசை வேதபுதூரில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா