×

எல்லாபுரம் ஒன்றியத்தில் அம்மா சிமென்ட் குடோனாக மாறிய சமுதாய கூடம்

ஊத்துக்கோட்டை, ஜன.22: பெரியபாளையத்தில் செயல்பட்டு வந்த சமுதாயக்கூடம் அம்மா சிமென்ட் குடோனாக மாற்றி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அதிகாரிகள் புதுப்பித்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இதை சுற்றி ஆத்துப்பாக்கம்,  அரியப்பாக்கம், தண்டுமாநகர், ராள்ளபாடி உள்ளிட்ட 20கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.

இந்த கிராமங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமணம், நிச்சயதார்த்தம், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் போன்ற பகுதிகளுக்கு சென்று அங்குள்ள திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டியிருந்தது. மேலும் பெரியபாளையத்திலேயே திருமண மண்டபங்களில் அதிக வாடகை கொடுத்து நிகழ்ச்சிகள் நடத்த வேண்டியிருந்தது.  இதை தவிர்க்கும் வகையில் பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் சமுதாய கூடம் கட்ட வேண்டும் என அப்பகுதி ஏழை எளிய மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 1998 - 1999ம் ஆண்டு ரூ.3 லட்சம் செலவில் சமுதாய கூடம் கட்டப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பயன்பெற்றனர். பின்னர் 10 வருடத்திற்கு பிறகு பெரியபாளையம் சமுதாய கூடம் பழுதடைந்து காணப்பட்டது.

ஆனால், அதிகாரிகள் அதை சீரமைக்காமல் சமுதாய கூடத்தில் அரசின் ‘அம்மா’ சிமென்ட் முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு விற்பனை குடோனாக மாற்றிவிட்டனர். இதனால் வீட்டு விசேஷங்கள் நடத்த ஏழை எளிய மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சிமென்ட் மூட்டைகளை வேறு இடத்திற்கு மாற்றி சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பெரியபாளையத்தில் உள்ள சமுதாயகூடம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழுதடைந்து காணப்பட்டது. இதில் தற்போது நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறவில்லை. இந்த சமுதாய கூடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு விடுவார்கள் என எதிர்பார்த்தோம், ஆனால் அதை அரசின் அம்மா சிமென்ட் மூட்டைகள் அடுக்கி வைக்க பயன்படுத்திக் கொண்டனர். எனவே சமுதாய கூடத்தில் உள்ள சிமென்ட் மூட்டைகளை வேறுயிடத்திற்கு மாற்றி சமுதாய கூடத்தை புதுப்பித்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கூறினர்.

Tags : community hall ,kutun ,Allpuram Union ,
× RELATED தேர்தல் பணி போலீசார் தபால் ஓட்டு போட்டனர்