×

சாலையோரங்களில் மனித கழிவு அகற்றுபவர்கள் குறித்து முறையான ஆய்வு நடத்த வேண்டும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

சென்னை: சாலையோரங்களில் உள்ள மனித கழிவுகளை அகற்றுபவர்கள் தொடர்பாக முறையான ஆய்வு நடத்த வேண்டும், என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. துப்புரவு பணியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடனான மாநில அளவிலான ஆலோசனை கூட்டம், தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் மன்ஹர் வால்ஜி பாய் ஷாலா தலைமையில் நேற்று சென்னையில் நடந்தது. இதில் தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மானி, சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், நகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) மதுசூதன் ரெட்டி, தலைமை பொறியாளர் (கட்டிடம்) மகேசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி செங்கொடி சங்க பொதுச் செயலாளர் னிவாசலு கூறியதாவது: சென்னையில் உள்ள கழிவுநீர் வடிகால்களில் இறங்கி மனித கழிவுகளை அகற்றுபவர்கள் மட்டுமே மனித கழிவுகளை அகற்றுபவர்கள் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆனால், சாலையோரங்களில் உள்ள மனித கழிவுகளையும் தொழிலாளர்கள்தான் அகற்றுகின்றனர்.  இவர்களை அந்தப் பட்டியலில் சேர்ப்பது இல்லை. எனவே இந்த தொழிலாளர்கள் தொடர்பாக முறையான ஆய்வு நடத்தவேண்டும். இவ்வாறு அகற்றும் தொழிலாளர்களுக்கு முறையான உபகரணங்கள் வழங்குவது இல்லை. அவ்வாறு வழங்கினாலும் அது முழுமையாக தொழிலாளர்களுக்கு சென்று சேருவது இல்லை.

இந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை மற்றும் படிகளை முறையாக வழங்க வேண்டும். இதைத் தவிர்த்து துப்புரவு தொழிலாளர்களுக்கு மாதம் ஒரு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அதுவும் முறையாக நடபெறுவது இல்லை. எனவே இந்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : unions ,investigation ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...