×

எப்போதும் பூட்டியே கிடக்கும் தோட்டக்கலைத்துறை அலுவலகம்

சங்கராபுரம், ஜன. 22 : கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதியாக உள்ளது சங்கராபுரம் தாலுகா. இந்த தாலுகா அதிக விளை நிலங்கள் கொண்ட பகுதியாக உள்ளது. சங்கராபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகத்தில் தோட்டக்கலைத்துறை செயல்பட்டு வருகின்றது. ஆனால் அந்த அலுவலகம் திறப்பது கிடையாது. அலுவலகத்திற்கு வரும் விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தேடும் அவலநிலையுள்ளது. இதுகுறித்து மூத்த விவசாயி ஆசீம் கூறுகையில் சங்கராபுரம் வட்டம் அதிக விவசாயிகளை கொண்ட பகுதியாகும். தமிழக அரசு விவசாயத்திற்கு பல்வேறு சலுகைகள் வழங்கி வரும் நிலையில் சங்கராபுரம் தோட்டக்கலைத்துறை அலுவலரிடம் கேட்டால் அவர் எந்த ஒரு சலுகையும் எங்களுக்கு வருவது கிடையாது. நீங்கள் வேண்டுமானால் உயரதிகாரியை கேளுங்கள் எனவும் கூறுகிறார். அரசு தோட்டப்பயிர்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு உணவு தானிய விதைகள், விவசாய உபகரணங்களான பக்கெட், தார்பாய் போன்ற உபகரணங்களை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை.  இதனை வெளி மார்க்கெட்டில் விற்று விடுவதாக கூறப்படுகின்றது.
 தோட்டக்கலைத்துறையில் வழங்கப்படும் சொட்டுநீர் பாசன முறைக்கு தகுதியில்லாத விவசாயிகளுக்கு முறைகேடாக கோப்புகள் தயாரிக்கப்பட்டு கூடுதல் தொகையை வசூல் செய்து, அவர்களுக்கு சொட்டு நீர்பாசனத்திற்கு அனுமதி வழங்கப்படுவதாக தகுதி உள்ள விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றார்கள். இவ்வாறு கூறினார். மேலும் இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி சங்கர் கூறுகையில், சங்கராபுரம் தோட்டக்கலைத்துறை அலுவலகத்திற்கு நான் வாரத்திற்கு மூன்று முறை சென்றாலும் அலுவலகம் பூட்டிய நிலையில் உள்ளது. அங்கு அலுவலக உதவியாளரை கேட்டபோது அதிகாரிகள் லேட்டாகதான் வருவாங்க நீங்க இந்த வருகை பதிவேட்டில் கையொப்பம் இடுங்கள் என கூறி வரும் விவசாயிகளிடம் ஒப்புதல் பெரும் அவலநிலையும் உள்ளது.
 விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற அனைத்து சலுகைகளும் கோப்புகளில் தான் உள்ளது. நேரடியாக விவசாயிகளுக்கு எந்த பலனுமில்லை என்று கண்ணீருடன் வேதனையாக தெரிவித்தார். எனவே மாவட்ட ஆட்சியர் மற்றும் தோட்டக்கலைத்துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சங்கராபுரத்தில் முறைகேடாக இயங்கிவரும் தோட்டக்கலைத்துறையை ஆய்வு செய்து அரசு வழங்கும் சலுகைகளை முறையாக விவசாயிகளுக்கு சென்றடைய வேண்டும் எனவும், திறக்கப்படாமல் இயங்கி வரும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை திறக்க வேண்டும் எனவும் சங்கராபுரம் பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை