தொழில் முனைவோர் சந்திப்பு கூட்டம்

புதுச்சேரி, ஜன. 22: புதிய தொழிற்சாலை துவங்குவதற்கு வசதியாக அரசு சார்பில் புதிய தொழிற்கொள்ைக வெளியிடப்பட்டது. அதன்படி தொழில் துவங்க வரும் தொழில் முனைவோருக்கு மின்கட்டணத்தில் சலுகை, மூலதனத்தில் மானியம், வட்டி மானியம், ஜெனரேட்டர் மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் அரசு அறிவித்திருக்கிறது. தொழிற்சாலைக்கு உடனடியாக அனுமதி தரும் வகையில் ஒற்றை சாளர முறையில் அனுமதி கொடுக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கார், செல்போன், உணவு பதனிடும் தொழிற்சாலைகள் துவங்குவதற்காக பலர் விண்ணப்பித்துள்ளனர். புதுச்சேரியில் சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமை தொழிற்சாலைகளை கொண்டு வருவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி வரும் 29ம் தேதி வெளிமாநில, வெளிநாடுகளை சேர்ந்த தொழில்முனைவோர் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து பேசவுள்ளனர்.
இதுதொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் செயலர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் நாராயணசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் தொழில்துறை அமைச்சர் ஷாஜகான், தலைமை செயலர் அஸ்வனிகுமார், தொழில் துறை செயலர் சரண், செயலர் சுந்தரவடிவேலு, கவர்னர் கூடுதல் செயலர் சுந்தரேசன், அறிவியல் தொழில் நுட்பம் சுற்றுச்சூழல்துறை இயக்குனர் ஸ்மிதா, உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்க்கண்ணன், மின்துறை கண்காணிப்பு பொறியாளர் ரவி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.ஏற்கனவே நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் புதுச்சேரியில் தொழில் தொடங்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

× RELATED தொழிலாளர் துறை ஆபீசு முன்பு மாத்திரை கம்பெனி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்