போலீசாரை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் மறியல்

புதுச்சேரி,  ஜன. 22: போக்குவரத்து போலீசார் தாக்கியதை கண்டித்து தொமுச  ஆட்டோ டிரைவர்கள் புதுவை ஆம்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, கோவிந்தசாலையைச்  சேர்ந்தவர் அய்யப்பன். தொமுச ஆட்டோ டிரைவரான இவர் புதிய பஸ் நிலைய ஆட்டோ  ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று காலை அவர் வழக்கம்போல் தனது  ஸ்டாண்டில் பணியில் இருந்தபோது அங்கு ரோந்து வந்த டிராபிக் போலீசார்,  போக்குவரத்துக்கு இடையூறாக வண்டியை நிறுத்தப்பட்டிருப்பதை கண்டித்ததாக  கூறப்படுகிறது.அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் மூண்ட நிலையில்,  அய்யப்பனை போலீஸ் அதிகாரி தாக்கினாராம். இதில் அவரது முகத்தில் பல் உடைந்து  காயம் ஏற்பட்ட நிலையில் மாநில தொமுச தலைமையிடம் முறையிட்டார்.
இதையடுத்து  தொமுச நிர்வாகி அண்ணா அடைக்கலம் தலைமையில் ஆட்டோ டிரைவர்கள் ஆம்பூர் சாலை-  நேருவீதி சந்திப்பில் திரண்டனர். அங்கு போக்குவரத்து போலீசாரை கண்டித்து  மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தெற்கு திமுக அமைப்பாளர் சிவா  எம்எல்ஏவும் அங்கு வந்தார்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்படவே, விரைந்து வந்த  போக்குவரத்து எஸ்பி வம்சிதரெட்டி மற்றும் பெரியகடை போலீசார் அவர்களை  சமாதானப்படுத்தினர். அப்போது புகார் அளித்தால் விசாரித்து சம்பந்தப்பட்ட  அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மறியலை  கைவிட்டு தொமுச ஆட்டோ டிரைவர்கள் கலைந்து சென்றனர்.

× RELATED பெட்ரோல் பங்கை ஆட்டோ டிரைவர்கள்...