முருகன் கோயிலில் உண்டிலை உடைத்து பணம் கொள்ளை

பாகூர், ஜன. 22:  தவளக்குப்பத்தில் முருகன் கோயில் உண்டியலை உடைத்து மர்ம ஆசாமி பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை தவளக்குப்பம் மருத்துவமனை வீதியில் சிவசுப்ரமணிய சுவாமி  கோயில்  உள்ளது. இதனை சுற்றி நிறைய குடியிருப்புகள் உள்ளன. நேற்று காலை தைப்பூசத்தை யொட்டி பக்தர்கள் கோயிலுக்கு சென்றனர்.  அப்ேபாது  அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம்  கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு  அதிர்ச்சியடைந்தனர். உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது  தெரியவில்லை.புத்தாண்டு, தை கிருத்திகை, பொங்கல்  பண்டிகையின் கோயிலுக்கு  வந்த அதிகப்படியான பக்தர்கள் உண்டியலில் காணிக்கை  செலுத்தியிருந்ததால்,  உண்டியலில் ஏராளமான பணம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து தவளக்குப்பம் காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.  சப்-இன்ஸ்பெக்டர்  புருசோத்தமன்  தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அங்கிருந்த  சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில், சுமார் 35 வயது  மதிக்கத்தக்க நபர் ஒருவர் பின்புறத்தில் உள்ள மதில்  சுவரை ஏறி கோயிலுக்குள்  குதித்ததும், உண்டியல் பூட்டை நிதானமாக உடைத்து தன் கழுத்தில் போட்டிருந்த  துண்டில் பணத்தை மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டு வந்த வழியாக  திரும்பி  சென்றதும் பதிவாகி இருந்தது. ஏற்கனவே ஒரு  ஆண்டுக்கு முன்பு இதே   கோயிலில் உண்டியல் பணம் திருடுபோனது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவம் நடந்த  சில மாதங்களில்  சிலை கழுத்தில் இருந்த தாலி திருடப்பட்டது. அதை தொடர்ந்து  உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்யப்பட்டது. இந்த  சம்பவங்களை தொடர்ந்து  அப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது.  தற்போது சிசிடிவி கேமராவில் குற்றவாளி உருவம் பதிவாகி உள்ளது. தைப்பூச  தினத்தன்று முருகன் கோயிலில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்  பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


× RELATED பணம் வைத்து சூதாடி கைதான போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்