×

முருகன் கோயில்களில் சிறப்பு தரிசனம்

புதுச்சேரி,  ஜன. 22: புதுச்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள முருகன்  கோயில்களிலும் மற்றும் பெரிய கோயில்களில் உள்ள முருகன் சன்னதிகளிலும்  தைப்பூச விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.தை மாதத்தில் வரும் பூச  நட்சத்திரமும், முழு நிலவும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு  எடுக்கப்படும் விழா தைப்பூச திருவிழா. இந்த நாளில் முருகனுக்கு காவடி  எடுத்து வழிபடுவது வழக்கம். பக்தர்கள் மருகன் கோயிலில் பால், பன்னீர்,  புஷ்பம் உள்ளிட்ட காவடிகளை எடுத்து அலகு குத்தி பக்தி பரவசத்துடன்  தரிசிப்பது வழக்கம்.
அதன்படி புதுவையில் பிரசித்தி பெற்ற முருகன்  கோயில்களில் ஒன்றான கவுசிக பாலசுப்பிரமணியர் கோயிலில் தைப்பூச விழாவை  முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. மேலும்  பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான  பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டது.

அம்பலத்தடையார் மடத்து வீதியிலுள்ள சமரச சுத்த  சன்மார்க்க சத்திய சங்கத்தினர் 148வது தைப்பூச விழா அகவல் பாராயணத்துடன்  தொடங்கியது. இதைத் தொடர்ந்து சன்மார்க்க கொடி ஏற்றப்படடு முதற்கால ஜோதி  தரிசனம் காண்பிக்கப்பட்டது. 7 திரை விலக்கி அருட்பெரும் ஜோதியை பக்தர்கள்  தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  இதுதவிர கடலூர் சாலையிலுள்ள ராமலிங்க மடம் உள்ளிட்டவற்றிலும் ஜோதி தாிசனம்  காண்பிக்கப்பட்டது.மேலும் புதுவை முத்தியால்பேட்டை முருகன் கோயில்,  பெத்துசெட்டிப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில், கதிர்காமம்  கதிர்வேல்சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் தைப்பூச விழா சிறப்பாக  கொண்டாடப்பட்டது.இதேபோல் தை பூசத்தை முன்னிட்டு வில்லியனூர்  பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும்  ஆராதனை நடந்தது. தொடர்ந்து 9 மணிக்கு மேல் பக்தர்கள் அலகு குத்தி தேர்  இழுத்தனர்.
இதேபோன்று கூடப்பாக்கம் நெமிலீஸ்வரர் கோயிலில் முருகப்  பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து கார், டிராக்டர், ஜேசிபி,  வேன் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு அலகு குத்தி செடல் இழுத்தனர். 50க்கும்  மேற்பட்டோர் காவடி தூக்கி ஊர்வலம் வந்தனர். மதியம் 12 மணியளவில் 5 ஆயிரம்  பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் கூடப்பாக்கம்,  கோனேரிக்குப்பம், அகரம், உளவாய்க்கால், தொண்டமாநத்தம், பிள்ளையார்குப்பம்  உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுவையை  அடுத்த தமிழக பகுதியான மயிலம் முருகன் கோயிலிலிலும் தைப்பூச தினத்தை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் அலகு குத்தியும், காவடி  எடுத்து வந்தும் முருகப்பெருமானை வழிபட்டனர். இதில் பல ஆயிரக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டது.

Tags : temples ,Murugan ,
× RELATED திருச்சியில் 2 கோயில்களின் பூட்டை உடைத்து நகை திருட்டு