×

முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஈமச்சடங்கு நிதி உயர்த்தப்படும்

புதுச்சேரி, ஜன. 22: புதுச்சேரியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஈமச்சடங்கு நிதி உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
 புதுச்சேரி முன்னாள் ராணுவ வீரர்களின் லீக் ஆண்டு விழா கருவடிக்குப்பம் இசிஆர் சாலையில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் நேற்று நடந்தது. பொதுச்செயலாளர் ஜோதிகுமார் வரவேற்றார். அமைச்சர் கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, இந்திய முன்னாள் ராணுவ வீரர்களின் லீக் தலைமை தலைவர் பிரிகேடியர் கர்த்தார் சிங் ஆகியோர், லெப்டினென்ட் சடடர்ஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, புதுச்சேரி ராணுவ வீரர்கள் லீக் தலைவர் மோகன் இலவச மனைப்பட்டா உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
 இவ்விழாவில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கி வருகிறோம். ராணுவ வீரர்களுக்காக முப்படை நலத்துறை அமைத்து, அதற்கு உயர்க்கல்வி கல்வித்துறை இயக்குநர் ெபாறுப்பாளராக இருந்து வருகிறார். அங்கு அவர் முழு நேரமும் செலவு செய்ய முடியாத சூழல் உள்ளது. இதனால் முப்படை நலத்துறைக்கு தனியாக ஒரு இயக்குநரை நியமிக்க வேண்டும் என கோரிக்ைக வைத்துள்ளீர்கள். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
 முன்னாள் ராணுவ வீர்கள் லீக்கிற்கு அலுவலகம் அமைக்க இடம் தேவைப்படுகிறது என பிரிகேடியர் கர்த்தார் சிங் தெரிவித்தார். அதற்கு தேவையான இடத்தை அரசு சார்பில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் ஈமச்சடங்கு நிதியை உயர்த்தி வழங்க வேண்டும், உணவு விடுதியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும், யுடிசி பணிக்கு தேர்வான முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பணி ஆணையை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைளை முன் வைத்துள்ளீர்கள். இதில் உடனடி நடவடிக்கையாக, முன்னாள் ராணுவ வீரர்கள் உயிரிழந்தால் அதற்கான ஈமச்சடங்கு நிதியை உயர்த்தி வழங்கப்படும்.
 அதேபோல் இலவச மனைப்பட்டா, 25 பணியிடங்களுக்கான பணி ஆணை வழங்குவது சம்மந்தமாக அமைச்சர் கமலக்கண்ணனுடன் பேசி நடவடிககை எடுக்கப்படும். ஓய்வூதியத்தொகை உயர்த்தி வழங்க நாங்க முடிவு செய்ய வேண்டிய கட்டத்தில் உள்ளோம். அதற்கு சில காலதாமதம் ஏற்படும்.
புதுச்சேரியில் ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டிய கடமை, பொறுப்பு அரசுக்கு உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் நிலை உங்களுக்கே தெரியும். மத்தியில் இருந்து கிடைக்க வேண்டிய நிதி முறையாக கிடைக்கவில்லை. இதனால் திட்டங்களை நிறைவேற்றுவதில் பல சிக்கல் ஏற்பட்டுள்ளன.
 நம்முடைய மாநில வருவாய் குறிப்பிட்ட அளவுதான் இருக்கிறது. புதுச்சேரிக்கு வணிக வரித்துறை மற்றும் கலால்துறை மூலம்தான் வருவாய் கிடைக்கிறது. ஆனால், பல துறைகள் மூலம் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பல ஆயிரம் கோடி செலவாகிறது. இந்த சூழ்நிலையில் 7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். அதற்கு மத்திய அரசு உதவி செய்யவில்லை. 2 ஆயிரம் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு நிதியை ஒதுக்கி கோப்பு அனுப்பினால், அதனை திரும்பி அனுப்பிகிற நிலை இருக்கிறது. இருப்பினும், தொழிலாளர்களுக்கு உதவி செய்கின்ற முறையில் கடைமையை செய்து வருகிறோம். அதேபோல் முன்னாள் ராணுவ வீரர்களின் பிரச்னைகளை தீர்க்க அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
 இந்நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : personnel ,Army ,
× RELATED முதல் ஐ.பி.எல் போட்டி: சேப்பாக்கம்...