×

5 அரசு துறை வாகனங்களுக்கு மாதந்தோறும் எரிபொருள் செலவு ₹7 கோடி

புதுச்சேரி, ஜன. 22: புதுச்சேரியின் முக்கியமான ஐந்து அரசு துறைகளில் மட்டும் எரிபொருளுக்காக மாதந்தோறும் ரூ.7 கோடி செலவு செய்யப்படும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் அரசு வாகனங்களை பலர் சொந்த உபயோகத்துக்காக பயன்படுத்துவதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகி வருகிறது.  இதற்கிடையே ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் அரசு துறைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்கள், எரிபொருள் செலவு குறித்த விவரங்களை கேட்டறிந்துள்ளார்.
அதன்படி தலைமை செயலகத்தில் 14 வாகனங்களுக்கு மாதந்தோறும் எரிபொருள் செலவாக ரூ. 1 லட்சத்து 53 ஆயிரத்து 793 செலவு செய்யப்படுகிறது.
அதேபோல் காவல்துறையில்( புதுச்சேரி பிராந்தியத்தில்) மட்டும் 66 வாகனங்களுக்கு 7 லட்சத்து 33 ஆயிரத்து 471, உள்ளாட்சித்துறை, மற்றும் நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகளில் பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் 36, இதற்காக மாதத்துக்கு 43 லட்சத்து 94 ஆயிரத்து 640 செலவு செய்யப்படுகிறது.
பொதுப்பணித்துறையில் 52 வாகனங்களுக்கு ரூ. 4 லட்சத்து 2 ஆயிரத்து 182, விவசாயத்துறை 20 வாகனங்களுக்கு ரூ. 1 லட்சத்து 4 ஆயிரத்து 847 எரிபொருளுக்காக மாதந்தோறும் அரசு செலவழிக்கிறது.
புதுச்சேரியில் மொத்தமுள்ள 49 துறைகளில் 5 துறைகளில் மட்டும் 133 வாகனங்களுக்கு மாதந்தோறும் ரூ. 6 கோடியே 94 லட்சத்து 67 ஆயிரத்து 196 எரிபொருள் செலவு செய்யபடுவதாக அரசு துறைகள் பதில் கொடுத்துள்ளது. இந்த பட்டியல் அதிகாரிகள் மட்டும் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே இடம்பிடித்துள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் மிகச்சிறிய பரப்பளவு கொண்டது. அனைத்து அரசு அலுவலகங்களும் மிகவும் அருகாமையிலே அமைந்திருக்கிறது. அரசின் அனைத்து துறைகளிலும் இருசக்கர வாகனங்கள் இருந்தும், நான்கு சக்கர சொகுசு வாகனத்தை பயன்படுத்துகின்றனர்.
அத்தியாவசியமில்லாமல் எரிபொருளுக்காக இவ்வளவு செலவு செய்யப்படுவதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே அரசு அதிகாரிகள் அனைவரும் அரசு அலுவல் சம்மந்தமான பணிகளுக்கு மட்டும் அரசு வாகனத்தை பயன்படுத்த வேண்டும்.
ஒரே அலுவலக வளாகத்தில் உள்ள அதிகாரிகள் அனைவரும் குறிப்பிட்ட ஒரே இடத்துக்கு ஆலோசனை கூட்டத்துக்கு செல்லும் போது ஒரே வாகனத்தில் பயணிப்பதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம். அவசியம் தவிர்த்து பிற நேரங்களில் ஒருவர் பயணிக்க ஒன்பது பேர் பயணிக்கக்கூடிய சொகுசு வாகனத்தை தேவையில்லாமல் எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
மிக குறுகிய தூரத்துக்கு செல்லும் போது ஏசி உபயோகிப்பது முற்றிலும் தவிர்க்கலாம். எனவே அரசின் அனத்து துறை வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் கருவி பொருத்தி துறை தலைமையகம் மூலம் கண்காணிக்க வேண்டும். இதன்காரணமாக அரசு அலுவல் அல்லாத பணிகளுக்கு வாகனங்கள் கொண்டு செல்வதை தவிர்க்கப்படும்.இதன் மீது கவர்னர் கிரண்பேடி, தலைமை செயலர் அஸ்வனிகுமார் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மனு அனுப்பியுள்ளார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...