×

விவசாயிகள் கேட்கும் ஆலைகளுக்கு கரும்புகள் வழங்க நடவடிக்கை

கடலூர், ஜன. 22: கடலூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக சர்க்கரைக்கான கரும்புகள் அதிகம் பயிரிடப்பட்டு வருகின்றன. ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் 3 தனியார் சர்க்கரை ஆலைகள் கடலூர் மாவட்டத்தில் இயங்கி வருகின்றன.இந்நிலையில் பல்வேறு தனியார் சர்க்கரை ஆலைகள் பாக்கித்தொகையை வழங்க வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் நிலுவை வைத்துள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகள் வழங்கவும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக பெண்ணாடத்தில் இயங்கி வரும் அம்பிகா சர்க்கரை ஆலை, சித்தூரில் இயங்கி வரும் திருஆரூரான் சர்க்கரை ஆலை ஆகியவை நடப்பு கரும்பு அரவை பருவத்தை துவங்கவில்லை. கரும்பு ஆலைகளின் அரவை காலம் துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் தங்களது கரும்புகளை எந்த ஆலைக்கு அனுப்புவது என்று தெரியாமல் குழம்பி வருகின்றனர்.
இதுகுறித்து வெலிங்டன் நீர்த்தேக்க பாசன விவசாயிகள் சங்க செயலர் சோமசுந்தரம் கூறுகையில், பெண்ணாடம் சர்க்கரை ஆலைக்காக சுமார் 11 ஆயிரம் ஏக்கர் நிலத்திலும், சித்தூர் ஆலைக்காக சுமார் 4 ஆயிரம் ஏக்கரிலும் கரும்பு பயிரிடப்படுகிறது. 2017-18 ஆம் ஆண்டில் அரவை செய்த காலத்திற்கான தொகை ரூ.38 கோடியை பெண்ணாடம் ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்கவில்லை. கரும்பு பாக்கிக்காக ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் வங்கியில் பிணைத் தொகையாக பெற்ற ரூ.28 கோடியையும் செலுத்தவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் ஆலைகளுக்கு கரும்பு வழங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை.
எனவே, இந்த ஆலைகளுக்காக வளர்த்து வரும் கரும்புகளை சேத்தியாத்தோப்பு, பெரியசெவலை பகுதியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வெட்டியனுப்புவதற்கான டைவர்சனை மாவட்ட நிர்வாகம் சர்க்கரைத்துறை ஆணையரிடம் பெற்றுத்தர வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைவாக வழங்குவதால் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். மேலும், மாநில அரசால் பரிந்துரைக்கப்படும் விலையை பெறுவதற்கு டைவர்சன் உத்தரவு அவசியமாகிறது. சேத்தியாத்தோப்பு, பெரிய செவலைக்கு அருகிலுள்ள கரும்புகளை அந்தந்த ஆலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன் கூறுகையில், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தங்களது முழு அரவை கொள்ளளவை எட்டியுள்ளதால் மற்ற ஆலைகளின் கரும்பினை அவர்களால் உடனடியாக இறக்கி அரவைக்கு எடுக்க முடியாது. இதனால், விவசாயிகளின் கரும்புகள் 2 நாட்களுக்கும் மேலாக ஆலையில் நிறுத்தி வைக்கப்படுவதால் கூடுதல் வாடகை செலுத்துவதோடு, கரும்பின் எடையும் குறைந்து விவசாயிகள் இரட்டிப்பு நஷ்டத்தை சந்திப்பார்கள். எனவே தனியார் ஆலைகளுக்கு டைவர்சனை ஆட்சியர் பெற்றுத்தந்து மற்ற சலுகைகளும் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறுகையில், மாவட்டத்தில் 2 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு வெட்டப்படும் கரும்புகளை கூட்டுறவு சங்க சர்க்கரை ஆலைகளுக்கு திருப்புவதற்கான டைவர்சன் ஆணை கேட்டு சர்க்கரைத்துறை ஆணையருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சில விவசாயிகள் தனியார் சர்க்கரை ஆலைக்கு டைவர்சன் கேட்கிறார்கள். ஆனால், ஏற்கனவே ஆலை நிர்வாகம் பாக்கி வைத்துள்ள நிலையில் அவர்களுக்கே மீண்டும் கரும்பு வழங்க வேண்டுமா என்று விவசாயிகளிடம் கேட்டுள்ளோம். எனினும், ஆணை பெற்றவுடன் விவசாயிகள் கேட்கும் ஆலைகளுக்கு டைவர்சன் வழங்கப்படும் என்றார்.

Tags :
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி