×

டேனிஷ் காலத்து பொருட்கள் கண்டுபிடிப்பு சாலமன் தோட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடக்குமா?

தரங்கம்பாடி, ஜன.22:  நாகை மாவட்டம், தரங்கம்பாடி சாலமன் தோட்டத்தில் டேனிஷ் காலத்து பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் அக்காலத்தில் கட்டப்பட்ட மாளிகைகளின் சுவர்களும், குளங்களில் படித்துறைகளும் இருந்தது தெரிய வந்தது. எனவே சாலமன் தோட்டத்தில் தொல்லியல்துறை முழுமையான அகழ்வராய்ச்சி செய்யுமா என்ற எதிர்பார்பில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.தரங்கம்பாடியை 1620 ஆம் ஆண்டு முதல் டேனிஷ் மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் காலத்தில் தரங்கம்பாடி அருகே உள்ள சாத்தங்குடி சாலமன் தோட்டத்தில் டேனிஷ் காலத்து மக்களும் ராஜகுடும்பத்தினரும் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர்களும் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. அவர்கள் வாழ்ந்த மாளிகையின் சுவர்கள் தற்போது வரை மறையாமல் உள்ளன.
கடந்த 2 வருடங்களுக்கு முன் டேனிஷ் காலத்து நாணயங்கள், சிகரெட்பைப், பயன்படுத்திய பீங்கான் பொருட்கள் உள்ளிட்டவைகளை அப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேய்க்க செல்லும் பெண்கள் எடுத்து வைத்திருந்தனர். அவைகளை தொல்லியல்துறையினர் கைப்பற்றி டேனிஷ் அருங்காட்சியகத்திற்கு எடுத்து சென்றனர். அவைகளை ஆய்வு செய்ததில் அவைகள் டேனிஷ் காலத்து பொருட்கள் என்பது உறுதி செய்யப்பட்டன. அதை தொடர்ந்து தொல்லியல்துறையினர் முதல் கட்ட ஆய்வு பணியை செய்தனர். விரைவில் முழுமையான அகழ்வராய்ச்சி அப்பகுதியில் செய்யப்படும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் 2 வருடம் ஆகியும் பணிகள் கிடப்பில் போட்டுள்ளது. மேலும் அங்கு இரண்டு குளங்கள் உள்ளன. ஓன்று ராஜாகுளம் என்றும் மற்றொன்று ராணிகுளம் என்றும் கூறப்படுகிறது. குளத்தில் உள்ள படிக்கட்டுகள் அந்த காலத்து கருங்கற்கலால் கட்டபட்டுள்ளன. மேலும் பெரிய கட்டிடங்கள் இருந்ததற்கான அடையாளமாக வட்டவடிவமான பெரிய தூண்கள் உள்ளன. டேனிஷ் காலத்தில் தான் வட்ட வடிவமான கட்டிடங்கள் கட்டபட்டு வந்தன. 10 ஏக்கர் பரப்பில் உள்ள அந்த இடம் தனியார் வசம் உள்ளதாக கூறப்படுகிறது. இங்கு அகழ்வராய்ச்சி செய்தால் மேலும் டேனிஷ் காலத்து பொருட்கள் கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு.
இது குறித்து ஓய்வு பெற்ற கல்லூரி பேராசியர் மரியலாசர் கூறியதாவது: கன்பால்கு ஜெர்மனியல் இருந்து தரங்கம்பாடிக்கு வந்ததற்கு பின் ஜெர்மனி நாட்டின் ஒரு பகுதியான மொரோவியனில் இருந்து மொரோவியர்கள் தரங்கம்பாடி வந்தனர். அவர்கள் தான் அந்த பகுதியில் தங்கி இருந்தனர். அவர்கள் தங்கி இருந்த போது திராட்சை தோட்டங்கள் அமைத்தனர். அதுவே தரங்கம்பாடி திராட்சை என்று அழைக்கபட்டது. அவர்கள் மேலும் சாத்துகுடி, காய்கறி தோட்டங்களை அமைத்திருந்தினர். இவர்கள் தரங்கம்பாடியில் இருந்து அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு சென்று கிறிஸ்துவ மதத்தை பரப்பினர். அந்த இடத்தை அகழ்வராய்ச்சி செய்வது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த காலத்து அரிய பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறினார். மேலும் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது. அந்த பகுதியில் பெரிய பங்களாக்கள் இருந்ததற்கான கட்டிடத்தின் தூண்கள் அதிக அளவில் உள்ளன.
மேலும் பங்களாவுடன் சேர்ந்து திராட்சை தோட்டமும் இருந்துள்ளது. இப்போதும் திராட்சை செடிகள் இங்குள்ளன. தரங்கம்பாடி திராட்சை என்ற பெயருடனேயே பெங்களுரூ உள்ளிட்ட ஊர்களில் திராட்சைகள் விற்கபடுகின்றன. இந்த இடத்தில் அகழ்வராய்ச்சி செய்தால் டேனீஷ் காலத்து அறிய பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு என்று கூறினார்கள்.



Tags : Danish ,archaeological site ,Solomon ,garden ,
× RELATED சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு