×

காரைக்காலில் கட்டிமுடித்து 2 ஆண்டாகியும் திறக்கப்படாத லெமேர் பாலம்

காரைக்கால், ஜன.22: கட்டி 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், திறக்கப்படாமல் உள்ள காரைக்கால் லெமேர் பாலத்தை உடனே திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். காரைக்கால் லெமேர் வீதி இறுதியில், தருமபுரம், புதுத்துறை உள்ளிட்ட கிராமங்களை இணைக்கும் வகையில், வாஞ்சியாற்றின் குறுக்கே பிரஞ்சுக்காலத்தில் கடப்பட்ட லெமேர் பாலம் தற்போதும் போக்குவரத்தில் உள்ளது. இப்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வலுவிழுந்து போனபோது, பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்று, பழைய பாலத்தை இடித்தால் போக்குவரத்து பாதிக்கப்படும். அதன் அருகே புதிய பாலம் கட்டினால் ஒன்றுக்கு 2 பாலம் கிடைக்கும் என்ற எண்ணத்தில், அப்போதைய எம்.எல்.ஏ நாஜிம், பழைய பாலத்தை இடிக்காமல், பழைய பாலம் அருகே சுமார் 50 மீட்டர் தூரத்தில், 66 மீட்டர் நீளத்திலும், 7.50 மீட்டர் அகலத்திலும் புதிய பாலம் கட்ட அரசிடம் போராடி நபார்டு வங்கி கடன் உதவி மூலம் ரூ.6.90 கோடி நிதி பெற்றார். அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு பாலம் கட்டுமானம் துவங்கி 2016 இறுதியில் முடிக்கப்பட்டது.
2016லிருந்து புதுச்சேரி அரசுக்கு ஏற்பட்ட நிதி பிரச்னை காரணமாகவும், தற்போதைய தொகுதி எம்.எல்.ஏ அசனாவின்(அதிமுக) ஆர்வமில்லாமையாலும், பாலத்தை ஒட்டி போடவேண்டிய சாலை, மின்விளக்கு, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் மந்த நிலையில் நடந்து வந்தது. தொடர்ந்து, தொகுதி எம்.எல்.ஏ அசனா, அப்போதைய கலெக்டர் பார்திபன் பாலத்தை ஆய்வு செய்தனர். பின்னர், ஏப்ரல் 2017ல் பாலம் பயன்பாட்டுக்கு வரும் என கலெக்டர் பார்திபன் நம்பிக்கை தெரிவித்தார். அதன்பின் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் பாலம் பயன்பாட்டுக்கு வரவில்லை. தற்போது, பாலத்தின் மீது மின் விளக்கு, பாலத்தின் இணைப்புப் சாலை, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் முடிந்துள்ளது. பாரதியார் சாலையிலிருந்து டூப்ளக்ஸ் சாலை மட்டும் போடவேண்டியுள்ளது. இருந்தும் பாலத்தை திறக்க இதுவரை யாரும் முன்வரவில்லை. ஆனால், பொதுமக்கள் பாலத்தை தற்சமயம் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, மீதமுள்ள சாலை பணியை முடித்து முறைப்படி பாலத்தை விரைந்து திறந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Lemar Bridge ,Karaikal 2 ,
× RELATED புதுச்சேரி மற்றும் காரைக்காலில் +2 தேர்வு முடிவுகள் வெளியீடு