×

தைப்பூச திருவிழா திருப்புடைமருதூர், அம்பை கோயிலில் தீர்த்தவாரி

பாப்பாக்குடி, ஜன. 22:  திருப்புடைமருதூர்  கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாதர் சுவாமி கோயிலில் தைப்பூசத் தீர்த்தவாரி விழா நேற்று நடந்தது.
திருப்புடைமருதூர்   நாறும்பூநாதர்சுவாமி  கோயிலில் தைப்பூச திருவிழா ஜன. 12 ம்தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. 7ம் திருநாள் மாலை சிவப்பு சாத்தியும், 8ம் திருநாள் வெள்ளை சாத்தி மற்றும்  பச்சை சாத்தி நடைபெற்றது. 9ம் திருவிழாவில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து நிலையம் சேர்த்தனர். நேற்று பத்தாம் திருநாளில் பகல் 1.40 மணிக்கு ரிஷப லக்னத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்த வாரியில் திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். தீர்த்த வாரியை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இன்று காலை வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளல், மதியம் சாஸ்தா ப்ரீதி, மாலை சண்டிகேஸ்வரர் சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள்,  நிர்வாக அலுவலர் தேவி, ஆய்வாளர் முருகன், தக்கார்  சீதாலட்சுமி மற்றும் கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.அம்பை:  அம்பை காசிநாதசுவாமி கோயிலில் நேற்று தைப்பூச திருவிழா நடந்தது. அம்பை அருகே தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள காசிநாதசுவாமி கோயிலில் அம்பை நகர வியாபாரிகள் சங்கம் சார்பாக 49வது தைப்பூச திருவிழா நடந்தது.  
காலை 7 மணிக்கு விரதம் இருந்த பக்தர்கள் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள தாமிரபரணி நதியில் புனித நீராடி அதன் அருகில் அமைந்துள்ள சுந்தர விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து மேள தாளம் முழங்க பால் குடம் எடுத்து புறப்பட்டனர். அங்கிருந்து  மேலப்பாளையம் தெரு, அகஸ்தியர் கோயில், பிரதான சாலை வழியாக  ஆற்றுச்சாலை சாலை வந்து கோயிலை வந்து சேர்ந்தனர்.

காலை 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடந்தது. காலை 9 மணிக்கு குபேர பூஜை, கும்ப பூஜை மற்றும் சண்முகருக்கு 108 சங்காபிஷேகமும் 21 வகையான  விசேஷ அபிஷேக தீபாராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு சுவாமிக்கு தாமிரபரணி நதிக்கரை காசிநாத சுவாமி படித்துறையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து  வியாபாரிகள் சங்கம் சார்பில் மதியம் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு சண்முகர் வெள்ளி சப்பரத்தில் ரதவீதியுலா நடந்தது.

விழாவை முன்னிட்டு மாணிக்கவாசகர் திருவாசகம் முற்றோதல் குழு மற்றும் சித்தி விநாயகர் பஜனை குழுவினரின் திருமுறை விண்ணப்பம் திருவீதியுலா, ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடந்தது.  நிகழ்ச்சியில் தர்க்கார் வெங்கடேஸ்வரன், செயல்அலுவலர் சத்யசீலன், வியாபாரிகள் சங்க தலைவர் காந்தி, செயலர் கார்த்திகேயன், பொருளாளர் சுப்புராமன், பண்ணை சந்திரசேகரன், நிர்வாகிகள்  அரிகரன், சேதுராமலிங்கம், குமரன் ரவி, வாசுதேவராஜா, வஜ்ரசேனா ரமேஷ், கணக்கர் கந்தசாமி, பக்த பேரவை சங்கரநாராயணன், சுடலையாண்டி, கோயில் ஊழியர்கள் உள்ளிட்ட வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி பகதர்கள் பலர் கலந்து கொன்டனர்.

Tags : festival ,Tiruppiddyarudur ,temple ,Arpita ,
× RELATED திருத்தணி அருகே திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா