×

தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் கோரமின்றி ஒத்திவைப்பு எட்டயபுரம் கூட்டுறவு நூற்பாலை முன் அதிமுக இயக்குநர்கள் தர்ணா

எட்டயபுரம், ஜன. 22:  எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலை தலைவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மான சிறப்பு கூட்டம் கோரம் இல்லாததால்  மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே சற்று நேரம் தாமதமாக சென்ற அதிமுக இயக்குநர்கள் 7 பேர் தங்களை அனுமதிக்கவில்லை எனக் குற்றம்சாட்டி ஆலை முன்பாக தர்ணா போராட்டம் நடத்தினர்.   எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலையில் கடந்த ஆண்டு அக்.6ம் தேதி நடந்த தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் தலைவராகவும், துணைத்தலைவராக சுந்தரமுருகேசனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் இயக்குநர்களாக வெள்ளையம்மாள், ராமலட்சுமி, பிருந்தா, அமிர்தகல்யானி, முததையா, வீரசுப்பிரமணியன், முனியசாமி, சரவணமுனி ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். இருப்பினும் ஒரு இயக்குநர் பதவி மட்டும் காலியாக உள்ளது.

துவக்கத்தில் தலைவர் சுப்பிரமணியனுக்கு ஆதரவளித்த அதிமுவைச் சேர்ந்த இயக்குநர்களில் 4 பேர், ஆதரவை திரும்பப்பெறுவதாக கூட்டுறவு மற்றும் கைத்தறி துறை உதவிஇயக்குநருக்கு மனு அனுப்பினர். இதையடுத்து உதவி இயக்குநர் ஏற்பாட்டின் பேரில் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான சிறப்பு கூட்டம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி நெல்லை கைத்தறி அலுவலர் (சட்டம் மற்றும் கலைத்தல்) மோகன்தாஸ் ரவி தலைமையில் இதற்கான சிறப்பு கூட்டம் நேற்று காலை 11.45 மணிக்கு துவங்கியது. ஆனால், அப்போது தலைவர் சுப்பிரமணியன், இயக்குநர் வீரசுப்பிரமணியன் ஆகிய இருவர் மட்டுமே  பங்கேற்றிருந்தனர். இதையடுத்து கோரம் இல்லாததால் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மறுதேதி அறிவிக்கப்படாமல் மோகன்தாஸ் ரவி ஒத்திவைத்தார். பின்னர் இயக்குநர்கள் வெள்ளையம்மாள், ராமலட்சுமி, பிருந்தா, அமிர்தகல்யானி, முனியசாமி, சரவணமுனி உள்ளிட்ட 7 பேர், கூட்டத்திற்கு சில நிமிடங்கள் தாமதமாக சென்றநிலையில் கூட்டத்தை எப்படி ஒத்திவைக்கலாம் என்றதோடு இதை கண்டித்து நூற்பாலை நுழைவுவாயில் முன் அமர்ந்து, நெல்லை கைத்தறி அலுவலரை வெளியே விடாமல் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் பேசிய மோகன்தாஸ் ரவி, கூட்டம் முறையாகத்தான் நடத்தப்பட்டது என  விளக்கமளித்தார். இருப்பினும் அதை ஏற்காத இயக்குநர்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முறைப்படியே நடவடிக்கை
கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறித்து அலுவலர் மோகன்தாஸ் ரவி கூறுகையில், ‘‘தலைவர் சுப்பிரமணியன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான கூட்டம் நேற்று காலை 11.45 மணிக்கு துவங்கியது 11.57 மணிக்கு வீரசுப்பிரமணியனும், அடுத்த நிமிடம் சுப்பிரமணியனும் மட்டுமே வந்தனர். வருகை பதிவேட்டிலும் இவர்கள் இருவர் மட்டுமே கையெழுத்திட்டிருந்தனர். பொதுவாக குறைந்தபட்சமாக இயக்குநர்கள் கூட்டம் நடத்த 6 உறுப்பினர்களாவது பங்கேற்க வேண்டும் என்பது கூட்டுறவு சங்கத் தேர்தல் விதியாகும். இந்நிலையில் 2பேர் மட்டுமே பங்கேற்றதால் உரிய கோரம் இல்லாத நிலையில் கூட்டத்தை மறுதேதியின்றி ஒத்திவைத்தேன். எனவே இதில் ஒருதலைபட்சமாக நான் நடக்கவில்லை. முறைப்படியே கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது’’ என்றார்.

Tags : Leaders ,AIADMK ,Cooperative Spinning Board ,
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...