×

கொடநாடு விவகாரம் முதல்வர் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்

நாகர்கோவில், ஜன.22: ெகாடநாடு விவகாரத்தில் முதல்வர் தன்னை குற்றமற்றவன் என்று நிரூபிக்க வேண்டும் என்று தமாகா மாநில பொதுசெயலாளர் விடியல் சேகர் தெரிவித்தார்.  தமாகா மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவியை தக்க வைக்க போராடவே நேரம் சரியாக இருக்கிறது. தமிழகத்தில் வளர்ச்சி திட்டம் என்று எதுவும் இல்லை. எல்லா துறைகளிலும ஊழல் நிறைந்துள்ளது. கொடநாடு வழக்கில் தற்போதயை முதல்வர் மீது குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. ஆகவே அவர் தன்னை குற்றமற்றவன் என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு உள்ளது.

தன் மீது எதிர்கட்சிகள் சதி செய்கின்றன என்று கூறி முதல்வர் இதில் இருந்து தப்பிக்க முடியாது. சட்டரீதியான விசாரணையை எதிர் கொண்டு அவர் தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர். மத்திய பா.ஜ., அரசு மீதான ரபேல் ஊழல் குற்றச்சாட்டுகள் பல கோணங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக உண்மையான வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும். குமரி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் வனத்துறை- காவல்துறை இடையே உள்ள பிரச்னையை மாவட்ட கலெக்டர் தலையிட்டு வனசொத்துக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் அறிவித்த பிறகு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் உயர்மட்ட குழு கூடி, பாராளுமனற தேர்தல் தொடர்பாக நல்ல முடிவு எடுக்கும்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு ஆட்சேபனை இல்லை. அதே வேளையில் காங்கிரஸ் கட்சியுடன் தமாகா இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  பேட்டியின்போது கிழக்கு மாவட்ட தலைவர் டி.ஆர்.செல்வம், மாநில பொதுச்செயலாளர் முன்னாள் எம்.பி., ராம்பாபு, மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிவசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் டாக்டர் சிவகுமார், செல்வி விலாஸ்குமார், ரசீது, புருனோ ரஞ்சித், தினேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Chief Minister ,Kodanad ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...