×

காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்: ஜாக்டோ- ஜியோ 3 இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்: புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் ஏதும் பலனளிக்காத நிலையில் போராட்டம் தீவிரமடையும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்திருந்தது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. குமரி மாவட்டத்தில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி பணியாளர் சங்கம், காவல்துறை அமைச்சு பணியாளர், வருவாய் கிராம ஊழியர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் அரசு பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர் என்று சங்கங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் கல்குளம், விளவங்கோடு  தாலுகா அலுவலகங்களில் இன்று (22ம் தேதி) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. வேலைநிறுத்தம் தொடர்பாக நாகர்கோவிலில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நேற்று மாலை 5 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனை போன்று தக்கலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடம், குழித்துறையில் திருத்துவபுரம் பள்ளியிலும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஜாக்டோ ஜியோ வட்டார பொறுப்பாளர்கள், அந்தந்த பகுதி அரசு ஊழியர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு பேசினர்.

நாளை (23ம் தேதி) மற்றும் 24ம் தேதி காலை 10.30 மணிக்கு நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், கல்குளம் விளவங்கோடு தாலுகா அலுவலகங்களில் ஜாக்டோ ஜியோ சார்பில் மறியல் போராட்டங்கள் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 25ம் தேதி காலை 10.30 மணிக்கு நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

Tags : strike ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து