×

நாகர்கோவில் அருகே தூர்வாரும் போது பரபரப்பு கிணற்றில் எலும்பு கூடு கண்டுபிடிப்பு

திங்கள்சந்தை, ஜன.22 : நாகர்கோவில் அருகே கிணற்றை தூர்வாரும் போது மனித எலும்பு கூடுகண்டுபிடிக்கப்பட்டன. 7 ஆண்டுகளுக்கு முன் மாயமான இளம் பெண்ணாக இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. நாகர்கோவில் அடுத்த கிறிஸ்டோபர் காலனி எஸ்.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (62). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் அந்த பகுதியில் சொந்தமாக தென்னந்தோப்பு வாங்கி இருந்தார். வீடு கட்டுவதற்காக இந்த தென்னந்தோப்பில் இருந்த கிணற்றை தூர்வார ஜெயக்குமார் முடிவு செய்தார். அதன்படி நேற்று காலையில் இருந்து கிணற்றை தூர்வாரும் பணி நடந்தது. 4 தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  மதியம் 2 மணியளவில் திடீரென கிணற்றுக்குள் இருந்து எலும்பு கூடு கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்து தொழிலாளர்கள் ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த இடம் ஆசாரிபள்ளம் மற்றும் இரணியல் காவல் நிலைய எல்கையின் நடுப்பகுதியில் உள்ளதால், இரு இடங்களில் இருந்தும் போலீசார் வந்தனர். பின்னர் சம்பவ பகுதி இரணியல் காவல் நிலையத்துக்குட்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டு, குளச்சல் ஏ.எஸ்.பி. கார்த்திக் வந்து விசாரணை மேற்கொண்டார். கிணற்றில் இருந்து சேகரிக்கப்பட்ட எலும்புகளை ஆய்வு செய்வதற்காக தடயவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் வைத்தே அந்த எலும்பு களை ஆய்வு செய்தனர். அப்போது எலும்பு கூட்டின் முக பகுதியை ஆய்வு செய்த போது, பல் பிடுங்கப்பட்டு இருந்ததற்கான தடயங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறினர். மேலும் கை பகுதி எலும்பு பகுதியில் சிறிது துணியும் ஒட்டி இருந்தது. எலும்பு கூடுகளுடன், ஒரு கொலுசும் கிடந்தது.

மேலும் எலும்பு கூடு பகுதியில் ஒட்டி இருந்த துணி, பெண்கள் அணிவதற்கான ரகத்தை சேர்ந்தது என்பதும் தெரிய வந்தது. எனவே இந்த எலும்பு கூடு ஒரு பெண்ணாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணையை தொடங்கினர். சுற்று வட்டார பகுதிகளில் யாராவது பெண்கள் மாயமாகி கண்டு
பிடிக்கப்படாமல் உள்ளார்களா? என்பது பற்றி அந்த பகுதியில் உள்ள வீடுகளில் விசாரித்தனர். அப்போது கிணற்றில் இருந்து சிறிது தொலைவில் உள்ள வீட்டில் வசிக்கும் டாக்டர் ஜகபர்சாதிக் என்பவரின் வீட்டில் இருந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2012 ல் மாயம் ஆனார். அதன் பிறகு எந்த தகவலும் இல்லை என்பது தெரிய வந்தது. உடனடியாக ஜகபர் சாதிக் வீட்டுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவரது மனைவியின் உறவு பெண்ணான கோவை மாவட்டம் கணபதிபாளையத்தை சேர்ந்த லிசி அடைக்கல மேரி (25) என்ற பெண், டாக்டர் ஜகபர் சாதிக் வீட்டில் தங்கி இருந்தார். உடல் நிலை சரியில்லாமல் இருந்த அவர், டாக்டர்  வீட்டில் வேலை பார்த்துக்கொண்டு சிகிச்சையும் பெற்று வந்தார். கடந்த 2012 ல் அவரை திடீரென காணவில்லை. இது குறித்து அப்போது ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இளம்பெண் மாயம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பல இடங்களில் தேடியும் லிசியை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று டாக்டர் ஜகபர் சாதிக் கூறினார். ஏற்கனவே அவருக்கு கோவையில் வைத்தே பல் பிடுங்கப்பட்டு இருந்தது என்றும் டாக்டர் ஜகபர் சாதிக் கூறினார். அவர் காணாமல் போன அன்று சிம்மிஸ் அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது.  

மேலும் அவர் அணிந்திருந்த கொலுசின் அடையாளத்தை கூறி, கோவையில் உள்ள லிசியின் தாயார் லூர்துமேரியிடம் போன் மூலம் விசாரணை நடந்தது. வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட கொலுசு மற்றும் ஆடையின் கலரை பார்த்த அவர் இது தனது மகள் லிசி அணிந்து இருந்தது தான் என கூறி உள்ளார். எனவே கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு கூடு லிசி தான் என சந்தேகிக்கப்படுகிறது.  ஆனால் போலீஸ் தரப்பில் இன்னும் உறுதிப்
படுத்தவில்லை. டி.என்.ஏ. சோதனை மற்றும் ரசாயண பரிசோதனைக்கு பிறகே இறந்தது யார்? என்பதை உறுதிப்படுத்த முடியும் என போலீசார் கூறி உள்ளனர்.

Tags : excitement grove ,dagger ,Nagercoil ,
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...