×

வந்தவாசியில் பசுமை வழி சாலை திட்டத்திற்கு கூடுதல் இடம் எடுக்கும் கருத்து கேட்பு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணிப்பு

வந்தவாசி, ஜன.22: வந்தவாசியில் 8 வழி பசுமை வழி சாலை திட்டத்திற்கு கூடுதல் இடம் எடுக்கும் பணிக்காக கருத்து கேட்பு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து அதிகாரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் நில அளவீடு செய்யப்பட்டது. அப்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஏற்கனவே எடுக்க இருந்த நிலத்தின் அருகாமையில் கூடுதலாக நிலம் எடுப்பதற்காக சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று வந்தவாசியில் தொடங்கியது.

வரும் 28ம் தேதி இந்த பணியை செங்கத்தில் முடிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் வந்தவாசி தாலுகாவை சேர்ந்த நம்பேடு, அரியப்பாடி, இஞ்சிமேடு, மகாதேவிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று வந்தவாசி தாலுகா அலுவலகம் வந்தனர். அப்போது விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தாலுகா அலுவலகம் வெளியில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.

அப்போது வருவாய் துறையினர் அலுவலகத்துக்குள்ளே வரும்படி அழைத்தனர். அதற்கு விவசாயிகள் உரிய அலுவலர் வந்து விளக்கம் கொடுத்து, சந்தேகம் தீர்ந்தால் வருவதாக கூறினர். தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் வெற்றிவேல் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஏற்கனவே நிலம் கொடுக்க மாட்டோம் என கூறிவந்தோம். இந்நிலையில் கூடுதல் நிலம் எடுக்க நடக்கும் இந்த கருத்து கேட்பு கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் 5 தாலுகாவிலும் நடக்க உள்ள கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறினர். தொடர்ந்து மறுதேதி குறிப்பிடாமல், விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக அனைத்து கூட்டமும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மேலும், பசுமை சாலை திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிக்கு வாக்களிக்க கூடாது. சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தேர்தலை புறக்கணிப்போம் என நோட்டீஸ் வெளியிட்ட விவசாயிகள் தொடர்ந்து கலைந்து சென்றனர்.

Tags : demand meeting ,Vanni ,
× RELATED சட்ட போராட்டம் நடத்தி...