×

செங்கம் அருகே தை பூசத்தையொட்டி கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வடை சுட்டு பக்தர்கள் நேர்த்தி கடன்

செங்கம், ஜன.22: செங்கம் அருகே தொரப்பாடி கிராமத்தில் பாலமுருகன் கோயிலில் தை பூசத்தையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வெறும் கையால் வடை சுட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தொரப்பாடி கிராமத்தில் பாலமுருகன் கோயிலில் ஆண்டு தோறும் தை பூச திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி நேற்று பாலமுருகன் கோயிலில் காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. தொடர்ந்து பம்பை சிலம்பாட்டம், தீ மிதி விழா, பூ கரகம், அம்மன், முருகர் தேர் இழுத்தல் நடைபெற்றது.

மேலும், காவடி எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தல், மஞ்சள் இடித்தல், முள் மிதிப்பு நடந்தது. தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வெறும் கையால் வடை சுட்டு சுவாமிக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : devotees ,temple ,boiling oil shaft ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்