×

சாத்தனூர் அணையில் தள்ளி 2 தொழிலாளர்கள் கொலையில் மேலும் 8 பேரிடம் விசாரணை செங்கம்

, ஜன.22: சாத்தனூர் அணையில் 2 தொழிலாளர்கள் கொலை தொடர்பாக 2 பேர் கைதான நிலையில் மேலும் 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் மீன் பிடிக்க ஏலம் விடப்பட்டுள்ளது. ஆனால் சிலர் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பதாக புகார் எழுந்தது. இதை தடுக்க குத்தகைதாரர் சார்பில் நியமிக்கப்பட்ட தற்காலிக தொழிலாளர்களான மல்லிகாபுரம் சிலம்பரசன்(27), முடியப்பன்(35), சந்தோஷ்(25) சாத்தனூர் மூர்த்தி(45), அணை பகுதி செந்தில்(35) ஆகிய 5 பேர் கடந்த 18ம் ேததி ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு வந்த 20 பேர் கொண்ட கும்பல் திடீரென தாக்கினர். இதனால் சிலம்பரசன், மூர்த்தி, முனியப்பன் ஆகியோர் தப்பியோடினர். சந்தோஷ், செந்திலை மர்ம கும்பல் அடித்துக் கொன்று அணையில் வீசியது. இதையடுத்து சாத்தனூர் அணை மற்றும் செங்கம் போலீசார், பொதுப்பணி, வனத்துறை அதிகாரிகளின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கடந்த 19ம் தேதி சந்தோசும், நேற்று முன்தினம் செந்திலும் சடலமாக மீட்கப்பட்டனர்.

கொலையாளிகளை பிடிக்க போளூர் டிஎஸ்பி சின்னராஜ், செங்கம் டிஎஸ்பி குத்தாலிங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில் தனிப்படை போலீசார் மர்ம கும்பலை தேடி வந்தனர். இதுதொடர்பாக செங்கம் அடுத்த ஆனைமங்கலம் கிராமத்தை சேர்ந்த மோகன்(45), கரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த சிவா(43) ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்நிலையில் சந்தேகப்படும் தண்டா, வணக்கம்பாடி கிராமங்களை சேர்ந்த மேலும் 8 பேரை பிடித்து தனிப்படை போலீசார் நேற்று செங்கத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்க மல்லிகாபுரம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Sathanur ,killing ,
× RELATED எருது விடும் விழா கோலாகலம்