நெல்லை மாவட்டத்தில் 2ம் நாளாக போலீசார் சோதனை மதுபானம் பதுக்கி விற்ற 57 பேர் கைது

நெல்லை, ஜன. 18: நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் நேற்று 2வது நாளாக போலீசார் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மதுவிற்ற 57 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2,675 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொங்கல் விடுமுறையையொட்டி சட்ட விரோதமாக மது விற்பனையை தடுக்க மாநகர கமிஷனர் மகேந்திரகுமார் ரத்தோட் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் சுகுணாசிங் மேற்பார்வையில் மாநகரத்தில் உள்ள 8 காவல்நிலையங்களுக்கு உட்பட்ட டாஸ்மாக் பார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மேலப்பாளையம் உள்பட மாவட்டம் முழுவதும் 2500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 தொடர்ந்து 2வது நாளாக போலீசார் சோதனை நடத்தினர். இதில் நெல்லை மாநகரத்தில் 2100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 20 பேர் கைது செய்யப் பட்டனர். இதுபோல் சங்கரன்கோவில், தென்காசி உள்பட மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் மொத்தம் 575 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 37 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் 57 பேர் கைது செய்யப்பட்டனர். 2 ஆயிரத்து 675 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

Related Stories: