ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா

திருப்பூர், ஜன. 18: திருப்பூர் மாநகரப்பகுதியில்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.பாலின சமத்துவம், போதை ஒழிப்பு, வேலைவாய்ப்பு வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா நேற்று திருப்பூர் மாநகர பகுதியில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது. திருப்பூர் பழனிசாமி நகர், அண்ணா காலனி, மற்றும் வடக்கு ஒன்றியம் பகுதிகளில் பரமசிவம்பாளையம், தோட்டத்துப்பாளையம், பி.டி.ஆர்.நகர் மற்றும் பெரியார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் விழா நடந்தது. இதில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர், சிறுவர், சிறுமியர்களுக்கான ஓட்டப்பந்தயம், பலூன் உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்பும் போட்டி, சாக்கு போட்டி, ஓவியம், கட்டுரை, பெண்களுக்கான மியூசிக்கல் சேர், வேக நடை, கோலப் போட்டி மற்றும் ஆண்களுக்கான உரி அடித்தல், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடந்தது. மாலையில் பரிசளிப்பு விழா மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் மாறு வேடம், நடனம், பாட்டு, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட, மாநில அளவில் சாதனைபுரிந்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்த பரிசளிப்பு நிகழ்ச்சிகளில்  மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல், மாநில குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில தலைவர் ரெஜீஸ்குமார், மாவட்ட தலைவர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories: