பாரம்பரிய ஜவுளி பொருட்களுக்கு உலக ஒத்துழைப்பு வியாபார குறியீடு எண் வழங்கல்

திருப்பூர், ஜன.18:பாரம்பரியமான 207 ஜவுளி பொருட்களுக்கு  உலக ஒத்துழைப்பு வியாபார இலக்க குறியீடு எண் வழங்கியுள்ள மத்திய அரசுக்கு ஏற்றுமதியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.பருத்தி நுால்களில் தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில்  அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். இந்திய பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கோடை கால ஆடை, குளிர் கால ஆடை என இரு வகையான ஆடைகளை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். வெளிநாட்டில் வசிக்கும் செல்வந்தர்கள் கோடை காலத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பருத்தி இலைகளால் ஆன ஆடைகளை, அதிகம் விரும்பி பயன்படுத்துகின்றனர். இதனால், அந்நாடுகளில் இலகுவான ஆடை அதிகளவு தேவைப்படுகிறது. கடந்த ஆண்டு திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் ரூ.23 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்துள்ளனர். தற்போது பாதுகாப்பு தொடர்பான ஆடை தயாரிப்பில், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  தீயணைப்பு வீரர்களுக்கு தீ பிடிக்காத ஆடை தயாரிப்பும், பனிப்பிரதேசங்களில் வசிக்கும் பொது மக்கள், ராணுவ வீரர்களுக்கும் குளிரை தவிர்த்து உடல் வெதுவெதுப்பாக இருக்கும் வகையில் ஆடை தயாரிப்பு, வெடிகுண்டு செயல் இழக்க செல்லும் வீரர்களுக்கு தகந்த ஆடைகள், சர்க்கரை வியாதி உடையவர்களுக்கு கை, கால் குடைச்சல், வீக்கம் ஏற்படுவதை தவிர்க்க சாக்ஸ் தயாரிப்பு,  புல்லட் ஜாக்கெட் தயாரிப்பு,  இரும்பு உருக்கு ஆலைகள், கார்பன் தொழிற்சாலைகள், நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், அதிக புகை மற்றும் தூசு  கக்கும் தொழில்களான கல் குவாரி, அரிசி அரவை ஆலை, மர அறுவை ஆலை ஆகியவற்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மாஸ்க் தயாரிப்பு என, பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு உரியவகையில் ஆடை தயாரிப்பில் பின்னலாடை நிறுவனங்கள் ஈடுபட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Advertising
Advertising

இதற்காக பாதுகாப்பு அம்சம் நிறைந்த ஆடைகள் தயாரித்து உலக பின்னலாடை சந்தையில் வியாபாரம் செய்ய உலக ஒத்துழைப்பு வியாபார இலக்க குறியீடு எண் வழங்க வேண்டுமென ஆயத்த ஆடை ஏற்றுமதி விருத்தி சபை சார்பில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதைதொடர்ந்து 207 ஆடை ரகங்களுக்கு உலக வர்த்தக ஒத்துழைப்பு வியாபார குறியீடு எண் மத்திய ஜவுளித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி விருத்தி சபையின் துணைத்தலைவர் சக்திவேல் கூறியதாவது:

இந்திய ஜவுளி உற்பத்தியில் பாதுகாப்பு அம்சம் நிறைந்த ஆடை தயாரிப்பில் பின்னலாடை உற்பத்தியாளர்கள் குறைந்த அளவே ஈடுபட்டுள்ளனர். உலக அளவில் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவகையில் ஆடை தயாரிப்பில் உற்பத்தியாளர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். பாதுகாப்பு அம்சம் நிறைந்த ஆடைகளை உலக சந்தையில் வியாபாரம் செய்ய குறியீட்டு எண் தேவை. அந்த வகையில் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று மத்திய ஜவுளி–்த்துறை 207 பாரம்பரிய ஜவுளிப்பொருட்களுக்கு உலக ஒத்துழைப்பு வியாபார இலக்க குறியீடு எண் வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு அம்சம் நிறைந்த நவீன தொழில்நுட்ப ஆடைகளை தயாரித்து சந்தை படுத்த வேண்டும். இம்மாதிரியான ஆடைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால், இந்திய ஜவுளித்துறையினர் உற்பத்தியில் தீவிரம் காட்ட வேண்டும். ஏஇபிசி-யின் கோரிக்கை ஏற்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்சுமிதி இராணி, செயலாளர் ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் ரூ.12 ஆயிரம் கோடிக்கு ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. இது 20 சதவீதம் ஆடை உற்பத்தி அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: