×

ரோஜா செடிகள் கருகாமல் இருக்க தண்ணீர் பாய்ச்சும் பணி தீவிரம்

ஊட்டி, ஜன. 18:  கடும்  உறைப்பனி மற்றும் பகல் நேரங்களில் வெயில் வாட்டுவதால், ஊட்டி பூங்காவில் உள்ள ரோஜா செடிகள்  கருகாமல் இருக்க தோட்டக்கலைத்துறையினர் நாள் தோறும் தண்ணீர் பாய்ச்சி  செடிகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.ஆண்டு தோறும்  நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை ஊட்டியில் பனிப்பொழிவு  காணப்படும். குறிப்பாக ஜனவரி மாதத்தில் உறைப்பனியின் தாக்கம் சற்று அதிகமாக  காணப்படும். இச்சமயங்களில் நீலகிரியில், குறிப்பாக ஊட்டி மற்றும்  சுற்றுப்புற பகுதிகளில் உள்ள புற்கள், சிறு செடி, கொடிகள் மற்றும் தேயிலை  செடிகள் கருகிவிடும். தற்போது ஊட்டி மற்றும் புற நகர் பகுதிகளில் பனியின்  தாக்கம் சற்று அதிகமாக காணப்படுவதால் தேயிலை செடிகள் காய்ந்து போய்விட்டன.  வனங்களிலும் செடி கொடிகள் காயத்துவங்கியுள்ளன. இதுமட்டுமின்றி, ஊட்டி ரோஜா  பூங்காவில் உள்ள ரோஜா செடிகளும் பனியில் கருகி வருகின்றன.கோடையில்  நடக்கவுள்ள ரோஜா கண்காட்சிக்காக அடுத்த மாதம் ரோஜா பூங்காவில் உள்ள அனைத்து  செடிகளும் கவாத்து செய்யப்படும். அதுவரை ரோஜா பூங்காவில் உள்ள ரோஜா  செடிகள் பராமரிக்கப்படுவது வழக்கம். வழக்கமாக தாவரவியல் பூங்காவில் மலர்  செடிகள் அகற்றப்பட்டு நாற்று நடவு பணிகள் துவக்கப்பட்டிருக்கும். இதனால்,  பூங்காவில் மலர்களை காண முடியாத சுற்றுலா பயணிகள் அனைவரும் ரோஜா  பூங்காவிற்கு சென்று அங்குள்ள ரோஜா மலர்களை காண்பது வழக்கம். டிசம்பர்  மற்றும் ஜனவரி மாதங்களில் பனி தாக்கி ரோஜா மலர்கள் மட்டுமின்றி, செடிகளும்  காயத்துவங்கிவிடும். எனவே, இதனை பிப்ரவரி மாதம் வரை பூங்கா ஊழியர்கள்  பாதுகாப்பது வழக்கம். வழக்கம் போல், இம்முறையும் பனி மற்றும் வெயிலால்,  ரோஜா பூங்காவில் உள்ள பெரும்பாலான செடிகளில் மலர்கள் கருக துவங்கியுள்ளன.  ஒரு சில செடிகள் கருகியுள்ளன. ரோஜா செடிகள் முற்றிலும் பாதிக்காமல் இருக்க  செடிகளை பாதுகாக்கும் முயுற்சியில் பூங்கா நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.  செடிகளுக்கு நாள் தோறும் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு  வருகிறது. மேலும், செடிகளில் நோய் தாக்காமல் இருக்க அவ்வப்போது  மருந்துகளும் தெளிக்கப்பட்டு வருகிறது.


Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்