×

பொங்கல் பண்டிகை எதிரொலி - உழவர் சந்தை, மார்க்கெட்களுக்கு காய்கறி வரத்து குறைந்தது

கோவை, ஜன.18: பொங்கல் பண்டிகை காரணமாக கடந்த 3 நாட்களாக கோவை மாவட்டத்திலுள்ள 7 உழவர் சந்தை மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு விவசாயிகள் வருகையும், காய்கறி வரத்தும் பாதியாக குறைந்தது.கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, சிங்காநல்லூர், சுந்தராபுரம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர் ஆகிய இடங்களில் உழவர் சந்தை உள்ளது. இதில் ஆர்.எஸ்.புரம் மற்றும் சிங்காநல்லூர் உழவர் சந்தையில் தினசரி சராசரியாக 170 விவசாயிகள் தங்களது காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதர வடவள்ளி, சுந்தராபுரம் ஆகிய உழவர் சந்தைகளில் சுமார் 80 விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், கோவை மாவட்ட உழவர் சந்தைகளில் கடந்த 15ம் தேதி பொங்கலன்று விவசாயிகள் வருகை 25 சதவீதம் குறைந்தது. பின்னர் நேற்று முன்தினம் (16ம் தேதி) மற்றும் நேற்று (17ம் தேதி) ஆகிய 2 நாட்களில் விவசாயிகள் வருகை பாதியாக குறைந்தது. ஆர்.எஸ்.புரம் மற்றும் சிங்காநல்லூர் உழவர் சந்தையில் தலா தினசரி சராசரியாக 70 டன் காய்கறிகள் ரூ.18 லட்சத்திற்கு விற்பனையாகும். வரத்து பாதியாக குறைந்ததால் பொங்கலன்று (15ம் தேதி) ரூ.5 லட்சமும், 16ம் தேதி மற்றும் 17ம் தேதிகளில் தலா ரூ.7.50 லட்சம் வீதம் ரூ.15 லட்சம் விற்பனை குறைந்தது. இது போல் மாவட்டம் முழுவதும் உள்ள 7 உழவர் சந்தைகளில் கடந்த 3 நாளில் மொத்தமாக ரூ.50 லட்சம் மதிப்பிலான காய்கறி விற்பனை குறைந்துள்ளது.
 இதுகுறித்து உழவர் சந்தை ஊழியர்கள் கூறுகையில், பொங்கலுக்கு முதல்நாளில் வழக்கத்தை விட கூடுதலாக விவசாயிகளும், காய்கறிகளும் வரத்து நிலவியது. விற்பனையும் அதிகரித்தது. பின்னர் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக விவசாயிகள் பாதிக்கு மேற்பட்டோர் விற்பனைக்கு வரவில்லை. விவசாயிகள் வருகை குறைவிற்கேற்ப, பொதுமக்களின் வருகையும் பாதியாக குறைந்தது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. வரத்து குறைந்தாலும், கிராக்கி இல்லாததால் பெரும்பாலான காய்கறிகள் விலை உயரவில்லை. சில காய்கறிகளின் விலை சரிந்துள்ளது’ என்றனர்.
விலை சரிந்துள்ள காய்கறிகள் விலை (அடைப்பு குறிக்குள் முந்தைய விலை) : வெண்டை ரூ.40-45 (45-50), நாட்டு தக்காளி ரூ.34-36 (38-40), ஆப்பிள் தக்காளி ரூ.34-36 (38-40), முள்ளங்கி வெள்ளை ரூ.14-18 (16-18). இதர காய்கறிகள் விலை 3 நாட்களாக உயரவில்லை.
இதே போல் கோவை உக்கடத்திலுள்ள காந்தி காய்கறி மார்க்கெட், ஒப்பணக்கார வீதியிலுள்ள தியாகி குமரன் காய்கறி மார்க்கெட், மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள மொத்த காய்கறி எம்ஜிஆர் மார்க்கெட் உள்ளிட்ட நகரிலுள்ள  பல்வேறு காய்கறி மார்க்கெட்களில் வரத்தும், விற்பனையும், விலையும் சரிந்திருந்தது

Tags : Pongal ,Echo ,
× RELATED மதுரை மஸ்தான்பட்டி காய்கறி மார்க்கெட் மூடல்: மீண்டும் திறக்க கோரிக்கை