பைபாஸ் ரோட்டில் அத்துமீறல் : காதலர்களை மிரட்டும் மர்ம கும்பல்

கோவை, ஜன.18: ேகாவை மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் ரோட்டில் மிரட்டல், அத்துமீறல், பணம் பறிப்பு கும்பலின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
 கோவை மதுக்கரை மரப்பாலம் முதல் அவிநாசி ரோடு நீலம்பூர் வரை 26 கி.மீ தூரத்திற்கு பைபாஸ் ரோடு அமைந்துள்ளது. 13 பாலம், 17 முக்கிய சந்திப்பு என இந்த பைபாஸ் ரோடு மாநில எல்லைக்கான முக்கிய வழித்தடமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக பைபாஸ் ரோட்டில் மிரட்டல், அத்துமீறல், பணம் பறிப்பு அதிகரித்துள்ளது. மின் விளக்கு இன்றி இருள் மயமாக காணப்படும் இந்த ரோட்டில் திருடர்கள் அடிக்கடி கைவரிசை காட்டி வருகின்றனர்.  
 செட்டிபாளையம் ரோடு சந்திப்பு, போடிபாளையம் ரோடு சந்திப்பு, பொள்ளாச்சி ரோடு சந்திப்பு, சிந்தாமணிப்புதூர் சந்திப்பு, நீலம்பூர் சந்திப்பில் மாலை, இரவு நேரங்களில் காரை நிறுத்தி பேசும் ஆண், பெண்களை மர்ம நபர்கள் சிலர் மிரட்டுவதாக தெரியவந்துள்ளது. படிக்கும் மாணவ மாணவிகள் ஜோடியாக பேசி கொண்டிருந்தால் அவர்களை மிரட்டி பணம் பறிப்பது அடிக்கடி நடக்கிறது. இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் பிரச்னையாகும் என சிலர் அச்சத்தில் போலீசில் புகார் தர தயக்கம் காட்டி வருகின்றனர். இதேபோல் பைபாஸ் ரோட்டில் மது குடிக்கும் வாலிபர்களையும் மர்ம கும்பல் மிரட்டி தாக்கி பணம் பறிப்பதாக தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன் வாலிபர் ஒருவர் போடிபாளையம் அருகே காரில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. காயத்துடன் தவித்த அவரை காப்பாற்ற சென்ற 2 பேர் பணம், நகை பறித்து தப்பித்தனர். 5 போலீஸ் ஸ்டேஷன் கட்டுபாட்டில் உள்ள இந்த பைபாஸ் ரோட்டில் புறக்காவல் நிலையம் கிடையாது. கற்பகம் கல்லூரி சுங்க வரி வசூல் மையம், சிந்தாமணிப்புதூர் சுங்க வரி மையத்தில் எப்போதாவது போலீசார் ேசாதனை நடத்துகிறார்கள்.
 நீலம்பூர் முதல் மதுக்கரை வரை 26 கி.மீ தூரத்திற்கு ரோந்து பணி முழுமையாக நடப்பதில்லை. பைபாஸ் ரோட்டில் வட மாநிலத்தை சேர்ந்த சிலர் தங்கியுள்ளனர். இவர்கள் சிலர் நள்ளிரவில் பைபாஸ் ரோட்டை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் வலம் வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பைபாஸ் ரோட்டில் சுற்றும் ஆடுகள் திருடப்படுவது வாடிக்கையாகி விட்டது. 24 மணி நேர வாகன போக்குவரத்து அதிகமுள்ள பைபாஸ் ரோட்டில் பாதுகாப்பிற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.


× RELATED கூந்தன்குளத்தில் மரக்கன்றுகள் நட்டிய பறவை ஆர்வலர்களுக்கு பாராட்டு