×

ரோட்டின் நடுவே மரணக்குழி வாகன ஓட்டுநர்கள் அவதி

கோவை, ஜன.18: கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் மூன்று ரோடுகள் பிரியும் இடத்தில் குடிநீர் குழாய் சரி செய்வதற்காக தோண்டப்பட்ட குழி ஆண்டுக்கணக்கில் ஆகியும் மூடப்படாத நிலையில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் மூன்று ரோடுகள் பிரியும் இடத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு குடிநீர் குழாய் சரி செய்வதற்காக குழி தோண்டப்பட்டது. ஆண்டுக்கணக்கில் ஆகியும் இந்த குழி முறையாக மூடப்படவில்லை. மேலும் குழியை சுற்றிலும் பாதுகாப்பு வளையமோ, அபாய எச்சரிக்கையோ எதுவும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் கவனமின்றி வந்தால் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்தாலும், குழி முறையாக மூடப்படாததாலும், குழியை சுற்றிலும் பாதுகாப்பு வளையம் அமைக்காததாலும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் மக்கள் நடமாட்டமின்றி, பள்ளி குழந்தைகளும் அதிகமாக செல்கின்றனர். வயதானவர்களும், பெண்களும் அவ்வப்போது குழியில் விழுந்து சிறு காயங்களுடன் தப்பி விடுகின்றனர். காயங்களை மட்டும் ஏற்படுத்தி வந்த குழி தற்போது பெரிதாகி கொண்டு வருவதால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : death squads ,road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...