×

காணும் பொங்கலையொட்டி பவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சத்தியமங்கலம், ஜன.18: காணும் பொங்கலையொட்டி பவானிசாகர் அணை பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பவானிசாகர் அணையின் முன்புறம் 15 ஏக்கர் பரப்பளவில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் மற்றும் படகு வசதி, ரயில், கொலம்பஸ், 3 டி சினிமா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பூங்காவுக்குள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறன்றனர். இதற்காக 5 ரூபாய் நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று காணும் பொங்கல் பண்டிகை என்பதால் பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை  காலை முதல் அதிகரித்தது. ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள், ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாட்டு உள்ளிட்டவைகளில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும், புல்வெளிகளில் அமர்ந்து உணவு மற்றும் திண்பண்டம் சாப்பிட்டனர். பூங்காவில் உள்ள விலங்கு வடிவிலான உருவம் முன்பு நின்று செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டினர். பூங்காவில் உள்ள செயற்கை நீருற்றுகள், பயணிகள் அதிகம் வரும் நாட்களில் இயக்கப்படுவது வழக்கம். நேற்று காணும் பொங்கல் என்பதால் பயணிகள் வருகை அதிகமாக இருந்தபோதிலும் செயற்கை நீருற்றுகள் இயக்கப்படவில்லை.



Tags : Bhavani Sagar Dam Park ,
× RELATED 8 மாதங்களுக்குப் பிறகு பவானிசாகர் அணை பூங்கா திறப்பு