உய்யக்கொண்டான் கோரையாற்றில் உலாவரும் முதலைகள் பொதுமக்கள் அச்சம்

திருச்சி, ஜன. 18: திருச்சி உய்யகொண்டான் கோரையாற்றில் முதலைகளால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் இருந்து வரும் கோரையாறு திருச்சி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள உய்யக்கொண்டான் தொட்டிபாலத்தில் பிரிந்து கத்திரிபாலம், தென்னூர், பாலக்கரை வழியே கோரையாறாக செல்கிறது. உய்யகொண்டானின் மறுபுறத்தில் கோரையாறு பிரிந்து காவிரியில் கலக்கிறது. உய்யகொண்டான் தொட்டிபாலம் மற்றும் ஆறுகண் எனப்படும் கோரையாற்றின் நடு பகுதியில் 2 பெரியமுதலைகள் மற்றும் 3 சிறிய முதலைகள் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அதிகளவில் தண்ணீர் இருந்ததால் முதலைகள் தண்ணீரில் மூழ்கி இருந்தது. தற்போது தண்ணீர் வற்றிய காரணத்தினால் தண்ணீருக்குள் இருந்த முதலைகள் அடிக்கடி கரைக்கு வந்து செல்கிறது. ஏற்கனவே இப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள், இளைஞர்கள் குளித்து வருகின்றனர். தண்ணீர் அதிகளவில் இருக்கும்போது, மினிசுற்றுலா தலமாக இப்பகுதி இருந்து வருகிறது. தற்போது முதலைகள் கரைக்கு வந்து செல்வதால் அப்பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரில் குளிக்க செல்பவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் 2 பெரிய முதலைகள் கோரையாற்றின் கரைக்கு வந்து ஓய்வு எடுத்துள்ளது. அப்போது அங்கு தேங்கிய தண்ணீரில் குளித்து கொண்டிருந்த இளைஞர்கள் கல்எறிந்ததால் முதலைகள் தண்ணீருக்குள் சென்று மறைந்து கொண்டது. எனவே தீயணைப்பு துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு கோரையாற்றில் உலா வரும் முதலைகளை பிடித்து முதலை பண்ணைகளில் விடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

× RELATED 5 கிலோ மீட்டர் அலைந்து குடிநீர் பிடிக்கும் மக்கள்