முசிறியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தா.பேட்டை,  ஜன.18: முசிறி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முசிறி  தொகுதியில் பிரதானமாக விளங்குவது முசிறி நகரமாகும். பரப்பளவிலும், மக்கள்  தொகையிலும் நகராட்சி அந்தஸ்தை பெற வேண்டிய நிலை இருந்தும் கூட  ஆட்சியாளர்களின் பாரா முகத்தால் முசிறி பேரூராட்சியாகவே உள்ளது. தற்போது  நகர் விரிவாக்கம் அடைந்த பகுதிகளில் போதிய அளவு கழிவுநீர் சாக்கடைகள்  இல்லாமல் இருப்பதும், நகர்புறங்களில் சேரும் குப்பை, பிளாஸ்டிக் ஆகியவை  சாக்கடை கால்வாய்களில் சேருவதால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்பதுமாக  உள்ளது.  மேலும் முசிறி நகரின் கழிவுநீர் காவிரிஆற்றில் பல இடங்களில் நேராக  கலக்கிறது. எனவே பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து முசிறியை சேர்ந்த சமூக ஆர்வலர்  கார்த்திக் கூறும்போது, முசிறி நகரமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர்,  சுற்றுச்சூழல் சுகாதாரம் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.  காவிரிஆறு ஓடும் முசிறி நகர மக்களுக்கு தினசரி சுத்தமான குடிநீர்  வழங்கவேண்டும். நகரின் கழிவுநீரை வெளியேற்ற பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு  வந்து நகரின் எல்லை புறத்தில் அரசு நிலத்தில் மறுசுழற்சி மையம் அமைத்து  கழிவுநீரை சுத்தம்செய்து விவசாய பயன்பாட்டிற்கு கொடுக்கலாம். இதனால்  சுகாதாரம் பேணிகாக்க வழிவகை உண்டு. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பாதாள  சாக்கடை திட்டம் கொண்டுவர அரசுக்கு பரிந்துரை கடிதமும், கருத்துருவும்  அனுப்ப வேண்டும்.  பாதாள சாக்கடை திட்டத்திற்கு தமிழக அரசு உரிய நிதி  ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறினார்.

Advertising
Advertising

Related Stories: