×

திருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 23ம் தேதி நடக்கிறது

திருவாரூர், ஜன.18:   திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது.  இதுகுறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் வரும் 23ம் தேதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
4 பிரிவுகளாக நடத்தப்படும் இப்போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் ஆண், பெண் இருபாலரும் பங்குபெறலாம். வயது வரம்பு கிடையாது. கால் ஊனமுற்றோருக்கு தடகள போட்டிகளில் 50.மீ ஓட்டம் மற்றும் குண்டு எறிதல், கை  ஊனமுற்றோர்களுக்கு 100மீ ஓட்டம், குள்ளமானவர்களுக்கு 50.மீ ஓட்டம், 2 கால்களும் ஊனமுற்றோர்களுக்கு  100மீ சக்கர நாற்காலி போட்டியும் நடைபெறுகிறது. குழு போட்டிகளில் இறகுப்பந்து போட்டி மற்றும் மேசைப்பந்து போட்டிகளும் நடைபெறுகிறது.  மேலும் முற்றிலும் பார்வையற்றோருக்கு 50.மீ ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளும், மிக குறைந்த பார்வையற்றவர்களுக்கு 100மீ ஓட்டம் மற்றும்  நின்ற நிலையில் தாண்டுதல் மற்றும் சாப்ட் பந்து எறிதல்  போட்டிகளும், குழு போட்டிகளலாக வாலிபால் போட்டியும் நடைபெறும். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50மீ மற்றும் 100மீ ஓட்டம், சாப்ட் பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல் ஆகிய போட்டிகளும், குழு போட்டிகளாக  எறிபந்து போட்டியும் நடைபெறும். காது கேளாதோருக்கு 100மீ மற்றும் 200மீ ஓட்டமும், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் 400மீ ஓட்டமும், குழு போட்டியாக கபடி போட்டியும் நடைபெறும்.  எனவே இந்த  போட்டிகளில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் நேரடியாக போட்டி நடைபெறும் நாளன்று போட்டியில் கலந்துகொள்ளலாம். முன் பதிவுகள் ஏதுமில்லை. போட்டிகளில் கலந்து கொள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச்சான்று மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவலரால் வழங்கப்பட்ட சான்றுகளை மாவட்ட விளையாட்டு அலுவலரின் பார்வைக்கு காண்பித்திடல் வேண்டும். இவ்வாறு கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags : sports competitions ,Thiruvarur ,
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...