100 நாள் வேலை திட்ட ஊதியத்தை கல்வி கடனில் வரவு வைக்கும் வங்கி விவசாய தொழிலாளர்கள் அவதி

கொள்ளிடம்,ஜன.18: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாதிரவேளூர் பாலுரான்படுகை, பட்டியமேடு உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த விவசாய தொழிலாளார்கள் மற்றும் மாணவர்கள் கொள்ளிடம் அருகே புத்தூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இந்த வங்கி கணக்கில் அரசின் மானியம் மற்றும் பல்வேறு வகையான நிதி உதவிகளும், விவசாயிகளுக்கான மானிய உதவி தொகைகளும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் நிதி உதவிகளும் அவர்களின் வங்கிக் கணக்கில் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் வங்கிக்கு நேரில் சென்றோ அல்லது ஏ.டி.எம் மூலமாகவோ பணத்தை பெற்று கொள்கின்றனர். இந்நிலையில் புத்தூரில் உள்ள வங்கியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு  திட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அவர்கள் வேலை செய்த ஊதியம் 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலமாக வேலையில் ஈடுபட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் வங்கிக்கு நேரில் சென்று ஊதியத்தை பெற்று வருவது வழக்கமான நடைமுறையாக பின்பற்றப்படுகிறது. இந்த கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்களின் ஊதியத்திலிருந்து அவர்களின் மகன் அல்லது மகள் வாங்கிய கல்விக்கடனை வங்கியாளர்கள் பிடித்தம் செய்துள்ளனர். வங்கிக்கு ஊதியத்தை பெற சென்ற பணியாளர்கள் பலர் ஊதியம் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துள்ளனர். ஊதியத்தை பெற வங்கிக்கு செல்லும் போது தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களின் அனுமதியின்றி, வங்கி ஊழியர்களே ரசீதை பூர்த்தி செய்து, கல்விக்கடனை கழித்து கொள்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் பலர் வேதனையில் உள்ளனர்.

மாதிரவேளூர் கீழ்த்தெருவை சேர்ந்த ராமையன் மனைவி பேபி என்பவர் 1 மாதமாக 100 நாள் வேலையில் ஈடுபட்டு, அதற்கான ஊதியத்தை பெறுவதற்கு கடந்த 4ம் தேதி புத்தூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சென்றார். இவரின் கணவர் ராமையன் சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், மருத்துவ செலவுக்காக பயன்படுத்திக்கொள்ள ஊதியத்தொகையை வங்கியிடமிருந்து பெற முயன்றார். ஆனால் பேபி மகள் பெற்ற கல்விக்கடனுக்குரிய தவணை தொகையை வங்கி ஊழியரே பணம் செலுத்துவதற்கான ரசீதை பூர்த்தி செய்து வங்கி கணக்கில் உள்ள ஊதிய தொகை ரூ2,500ஐ எடுத்து விட்டனர். இதே போல் 100க்கும் மேற்பட்டோரின் ஊதிய தொகையை, கல்விக்கடன் மற்றும் உயிர்காக்கும் மருத்துவ உதவிதொகையாக அரசால் ரூ.1000 வீதம் வழங்கப்படும் நிதி உள்ளிட்ட பல்வேறு அரசின் உதவித்தொகைகளையும், தொழிலாளர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்கின்றனர். இப்படி முறையற்ற வழியில் விதிக்கு புறம்பாக தொழிலாளர் ஊதியத்திலிருந்து பணம் பிடித்தம் செய்வதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: