ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை

சேலம், ஜன.18: சேலத்தில் சவ ஊர்வலத்தில் வெடித்த பட்டாசு ஆட்டோவில் விழுந்து வெடித்ததில் டிரைவர் படுகாயம் அடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சேலம் அருகேயுள்ள நிலவாரப்பட்டியை சேர்ந்தவர் துரை(40). ஆட்ேடா டிரைவர். சீலநாய்கன்பட்டியில் இருந்து கொண்டலாம்பட்டி வரை ஷேர்ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும்  கல்லூரியில் படிக்கும் 2 மகன்களும் உள்ளனர். நேற்று கொண்டலாம்பட்டி காட்டூரைச்சேர்ந்த கந்தன்(80) என்ற முதியவர் காலமானார். அவரது உடலை காட்டூர் சுடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது பட்டாசு வெடிக்கப்பட்டது.ஆட்டோ டிரைவர் துரை, இறந்த கந்தனுக்கு போடப்பட்ட மலர் மலைகளை ஏற்றிக் கொண்டு, ஊர்வலத்தின் முன்னால் சென்று கொண்டிருந்தார். அந்த ஆட்டோவில் பட்டாசு பாக்கெட்டுகளும் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது வெடிக்கப்பட்ட பட்டாசு ஒன்று, ஆட்டோவில் விழுந்தது. இதில் ஆட்டோவில் இருந்த பட்டாசுகளும் வெடித்தது. சிறிது நேரத்தில் ஆட்டோ சின்னாபின்னமானது. இதனால் ஊர்வலத்தில் சென்றவர்கள் திகைத்துப்போனார்கள். சிறிது நேரத்தில் ஆட்டோ டிரைவர் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொண்டலாம்பட்டி எஸ்.ஐ., மார்டீன் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: