மாடுபிடி வீரர்கள் சாலை மறியல் கெங்கவல்லி அருகே பரபரப்பு

கெங்கவல்லி, ஜன.18:  ஆத்தூர் அருகே கூலமேட்டில் இன்று நடக்கும் ஜல்லிக்கட்டில் பெயர் பதிவு செய்ய அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த மாடுபிடி வீரர்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஆத்தூர் அடுத்த கூலமேட்டில் இன்று(18ம் தேதி) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று, கலெக்டர் ரோகிணி, எஸ்பி தீபா கனிகர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் பங்கேற்க உள்ளது. அதேபோல் 700 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்களுக்கு விழாக்குழு சார்பில், கிராமம் ஒன்றுக்கு 50 வீரர்களுக்கு டோக்கன் வழங்கியுள்ளனர். ஆனால், கடம்பூர் கிராமத்துக்கு மட்டும் 27 டோக்கன் மட்டுமே வழங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த மாடுபிடி வீரர்கள், விழா குழுவிடம், டோக்கனை அதிகமாக வழங்கக்கோரி முறையிட்டனர். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து நேற்று மாலை 5.30 மணியளவில், கடம்பூரை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்ேடார், கடம்பூர்- கூலமேடு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வெளியூர்களில் இருந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளை ஏற்றிச்சென்ற வாகனங்கள் வரிசையாக நின்றன. இதுகுறித்த தவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கெங்கவல்லி எஸ்ஐ சிவசக்தி மற்றும் வருவாய்த்துறையினர், மாடுபிடி வீரர்களுடன் ேபச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வாகனங்களை விடுவித்தனர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.வாகனங்களை தடுத்தால் கைது செய்வோம். நீங்கள் போட்டி நடத்துபவரிடம் நேரில் பேசிக்கொள்ளலாம் என போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து மாடுபிடி வீரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்த கடைகள் மூடப்பட்டன. இதை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Advertising
Advertising

Related Stories: