பொங்கல் பண்டிகை முடிந்தது பேருந்து நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

கும்பகோணம், ஜன. 18: பொங்கல் பண்டிகை முடிந்ததால் தங்களது ஊருக்கு ெபாதுமக்கள் புறப்பட்டு சென்றனர். இதனால் தஞ்சை மாவட்ட பஸ் நிலையங்களில் மக்களின் கூட்டம் அலைமோதியது.தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல் பண்டிகை கடந்த 15ம் தேதி முதல் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை கொண்டாடுவதற்காக வெளியூரில் வேலைபார்ப்பவர்கள் மற்றும் தங்களது சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் கடந்த 11ம் தேதி முதல் சென்றனர். இதனால் கடந்த 11ம் தேதி முதல் அனைத்து பேருந்து நிலையங்களும் பயணிகள் கூட்டத்தில் நிரம்பிவழிந்தது.இதைதொடர்ந்து கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகை, 16ம் தேதி மாட்டு பொங்கல், நேற்று காணும் பொங்கலை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் இன்று முதல் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகள் இயங்குகிறது. மேலும் அரசு ஊழியர்களின் விடுமுறை நேற்றுடன் முடிந்தது. இதற்காக நேற்று மதியம் முதல் சொந்த ஊர்களுக்கு வந்தவர்கள், தாங்கள் வசிக்கும் ஊர்களுக்கு சென்றனர்.

இதையொட்டி தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. கும்பகோணம் பேருந்து நிலையம் திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம் உள்ளிட்ட அதிகமான கிராமங்களுக்கு மைய பகுதியாக இருப்பதால் சென்னை, திருப்பூர், கோவை, நாகர்கோவில், பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்காக பொதுமக்கள் வந்து செல்வர். இதனால் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் நேற்று மதியம் முதல் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ஆனால் போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்தனர்.சென்னைக்கு அதிகமான பேருந்துகளை இயக்குவதால் திருச்சி, தஞ்சை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் குறைவாக இருந்தது. இதேபோல் கும்பகோணம் ரயில் நிலையத்திலும் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

Related Stories: