நுண்ணூட்டச்சத்து கரைசல் தெளித்தால் கடலையில் கூடுதல் மகசூல் பெறலாம் விவசாயிகளுக்கு ஆலோசனை

சேதுபாவாசத்திரம், ஜன.18: நிலக்கடலை பயிரில் கூடுதல் மகசூல் பெற நுண்ணூட்டச்சத்து கரைசல் தெளிப்பதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வித்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் 1,500 ஏக்கருக்கு மேல் மார்கழி பட்ட நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அவை தற்போது வளர்ச்சி பருவம், விழுது இறங்கும் பருவம், காய் பிடிக்கும் பருவம் என பல்வேறு நிலைகளில் உள்ளது. இத்தருணத்தில் நுண்ணூட்டச்சத்து கரைசல் தெளிப்பது மிகவும் அவசியமாகும். நுண்ணூட்டச்சத்து கரைசல் தயாரிக்க ஒரு ஏக்கருக்கு தேவையான டிஏபி ஒரு கிலோ, அம்மோனியம் சல்பேட் 400 கிராம், பொட்டாஷ் ஒரு கிலோ, பிளானோபிக்ஸ் 125 மில்லி ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும். இவற்றில் டிஏபி உரத்தை (1 கிலோ) நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் முதல்நாளே ஊற வைக்க வேண்டும். மறுநாள் தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து கொண்டு அத்துடன் மேற்கண்ட பிற பொருட்களையும் (பிளானோபிக்ஸ் தவிர்த்து) கலந்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கலவையாக்கி ஒரு ஏக்கர் பரப்பில் மாலை வேளையில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். பிளானோபிக்ஸ் பயிர் ஊக்கி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தனியாக தெளிக்க வேண்டும்.

இம்மாதிரியான கரைசலை விதைத்த 25வது நாள் மற்றும் 40வது நாள் என 2 முறை தெளிக்க வேண்டும். மேலும் 45வது நாள் பூக்கும் தருணத்தில் களைக்கொத்தி மண் அணைக்கும் முன் ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். பிளானோபிக்ஸ் பயிர் ஊக்கி மருந்து தெளிப்பதால் பூக்கள் உதிர்வது தடுக்கப்பட்டு அத்தனை பூக்களும் விழுதுகளாக மாறுகிறது. நுண்சத்துக்கரைசல் தெளிப்பு மற்றும் ஜிப்சம் இடுவதால் அனைத்து பேரூட்டம் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை பயிர்கள் நேரடியாக எடுத்து கொண்டு உருவாகும் விழுதுகள் அனைத்தும் காய்களாக மாறி பொக்கற்ற திரட்சியான நல்ல எடையுடன் கூடிய தரமான கடலை பருப்புகள் உருவாகிறது.

இதனால் ஒரு ஏக்கரில் 25 முதல் 30 சதம் வரை கூடுதலாக மகசூல் கிடைக்கிறது. எனவே நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த குறைந்த செலவு தொழில் நுட்பங்களை கடைபிடித்து அதிக லாபம் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: