தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகையை நிர்ணயம் செய்யாததால் பலமடங்கு உயர்வு முத்தரப்பு கூட்டம் நடத்த விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சை, ஜன. 18: தஞ்சை மாவட்டத்தில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகையை நிர்ணயம் செய்யாததால் பலமடங்கு உயர்ந்துவிட்டது. இதனால் முத்தரப்பு கூட்டத்தை கூட்டி கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர்.தஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டு சம்பா 80,000 எக்டேரிலும், தாளடி 20 ஆயிரம் எக்டேரிலும் சாகுபடி நடந்துள்ளது. இதில் முன்பட்ட அறுவடை தற்போது துவங்கியுள்ளது. தஞ்சை, ஒரத்தநாடு, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, தோகூர், பாபநாசம், கும்பகோணம் போன்ற பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ளது. இந்நிலையில் சம்பா அறுவடைக்கு பயன்படுத்தப்படும் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்து ஆண்டுதோறும் அறுவடை துவங்கும் முன்பே மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்படும். இதற்கு வேளாண் பொறியியல் துறை, வேளாண்துறை, வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டு வாடகை நிர்ணயிக்கப்படும். ஆனால் இந்தாண்டு அறுவடை துவங்கி விட்ட நிலையில் கூட்டமும் கூட்டவில்லை, வாடகையும் நிர்ணயிக்கவில்லை. இதனால் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்கள் இஷ்டம்போல் வாடகை வசூலிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது ஒரே நேரத்தில் பெரும்பாலான இடங்களில் அறுவடை துவங்கிவிட்டதால் நெல் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையை சாதகமாக பயன்படுத்தி தனியார் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் சென்ற ஆண்டைவிட கூடுதல் கட்டணத்தில் வசூல் செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்தாண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல் அறுவடை செயின் மாடலுக்கு மணிக்கு ரூ.1,800, டயர் மாடலுக்கு மணிக்கு ரூ.1,150 என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல் அரசின் வேளாண் பொறியியல் துறை மூலம் இயங்கி வரும் அரசு அறுவடை இயந்திரங்களுக்கு செயின் மாடலுக்கு மணிக்கு ரூ.1,415, டயர் மாடலுக்கு மணிக்கு ரூ.875 வாடகை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் இந்தாண்டு வாடகை நிர்ணயம் செய்வதற்கான எந்த முயற்சியையும் இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கவில்லையென விவசாயிகள் தரப்பில் புகார் சொல்லப்படுகிறது. மேலும் கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமும் நடத்தப்படாததால் விவசாயிகள் தங்களின் கோரிக்கை, குறைகளை எடுத்து சொல்ல எந்த வாய்ப்பும் இன்றி தவிக்கின்றனர். ஆனால் கஜா புயல் காரணமாக கூட்டம் நடத்தவில்லையென மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும் விவசாயிகளுக்கு சேர வேண்டிய வழக்கமான வேளாண் பயன்கள் தடைப்பட்டுள்ள நிலையை அரசு உணர்ந்து உடனடியாக வாடகை நிர்ணயம் செய்வதற்கான முத்தரப்பு கூட்டத்தை கூட்ட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் கூறும்போது, ஆண்டுதோறும் நெல் அறுவடை துவங்கும் முன்பே முத்தரப்பு கூட்டத்தை கூட்டி நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் இந்தாண்டு கஜா புயலை காரணம் காட்டி வாடகை நிர்ணயிக்கும் முத்தரப்பு கூட்டம் கூட்டவில்லை. இதனால் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு கூடுதலான வாடகை வசூலிக்கப்படுகிறது. இயந்திரங்கள் வாடகைக்கு கொடுப்பதற்கு இடைதரகர்களும் உள்ளதால் வாடகை கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்துவிட்டது. எனவே உடனடியாக முத்தரப்பு கூட்டி மாவட்ட நிர்வாகம் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்து அறிவிக்க

வேண்டும் என்றார்.

Related Stories: